திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. முத்தரசன், தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காண்பது வெறும் பகற்கனவு என்றும், தமிழ்நாடு ஒரு தனித்துவமான மாநிலம் என்பதால் அவர் விரும்புவது போல் எதையும் இங்கு செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

அமித்ஷா புதுக்கோட்டையில் பொறுப்பற்ற முறையில் அநாகரிகமாகப் பேசியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், வெளிமாநிலங்களில் தமிழகத்திற்கு எதிராகவும் இங்கு வரும்போது புகழ்ந்தும் பேசும் அவரது இரட்டை வேடத்தை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என விமர்சித்தார். மேலும், திமுக கூட்டணி என்பது தேர்தலுக்கானது மட்டுமல்ல, அது ஒரு வலுவான கொள்கைக் கூட்டணி என்றும், வரும் தேர்தலில் இக்கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று திமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தற்போது அதிமுக-விற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே இரண்டாம் இடத்தைப் பிடிப்பதில்தான் போட்டி நிலவுவதாகவும், தேர்தலின் போது தொகுதிப் பங்கீட்டைச் சமமான முறையில் சுமுகமாகப் பேசி முடிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச விவகாரங்கள் குறித்துப் பேசிய முத்தரசன், வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா கடத்திச் சென்றிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்திய நடவடிக்கையைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில்

ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார். அதேபோல, ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சிதைக்கும் முயற்சியைக் கண்டித்து ஜனவரி 30-ல் கிராமப்புற ஆர்ப்பாட்டமும், பிப்ரவரி 12-ல் பொது வேலைநிறுத்தமும் நடைபெறும் எனத் தெரிவித்தார். இறுதியாக, தமிழக அரசு நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் அரசு

ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருப்பதையும், பொங்கல் பரிசாக ₹3,000 அறிவித்திருப்பதையும் பாராட்டிய அவர், நல்ல மனம் உள்ளவர்கள் ஏழை எளிய மக்களுக்கான இந்தத் திட்டங்களை வரவேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments