மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, “அன்புச்சோலை – முதியோர் பகல் நேர பராமரிப்பு மையம்” என்ற திட்டத்தை திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட முதியோர்களுக்காக முதியோர் இல்லங்கள், ஒருங்கிணைந்த வளாக இல்லங்கள், நடமாடும் மருத்துவ அலகுகள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளிட்ட மூத்த குடிமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களைத் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று தொடங்கப்பட்டுள்ள “அன்புச்சோலை” திட்டம் மூத்த குடிமக்களின் ஆரோக்கியமான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் திருச்சி, மதுரை, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா இரண்டு வீதம் 20 இடங்களிலும் தொழில்துறை மாவட்டங்களான இராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா ஒன்று , பெருநகர சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் 3 என மொத்தம் 25 “அன்புச்சோலை” மையங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் மூத்த குடிமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், யோகா, நூலகம் மற்றும் திறன் மேம்பாடு சேவைகள் வழங்கும் வகையில் செயல்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் பகலில் மட்டும் இயங்கும் மையமாகச் செயல்படும். ஒவ்வொரு மையத்திலும் 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் போதிய இடவசதி.
போதுமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும்.
அன்புச்சோலை மையங்களுக்கு வருகை தரும் முதியவர்களுக்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். தகுதி வாய்ந்த பராமரிப்பாளர்கள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்கள் பணியமர்த்தப்பட்டு முதியோரின் விரிவான பராமரிப்பு உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பொன்மலைப்பட்டி அருகே அன்புச்சோலை திட்டத்தை தொடக்கி வைத்தார்.
மேலும் காணொளி காட்சி மூலம் மற்ற இடங்களில் அன்புச்சோலை மையங்களை முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதா ஜீவன், ரகுபதி, அன்பில் மகேஷ், சிவசங்கர், மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மையத்திற்குள் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்புச்சோலை மையத்தில் உள்ள முதியவர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அங்கு கேரம் போர்டு விளையாடி கொண்டிருந்த முதியவர்களுடன் அமர்ந்து முதலமைச்சரும் கேரம்போர்டு விளையாடி மகிழ்ந்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments