Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் குப்பை அள்ளும் வண்டியில் வந்திறங்கிய அரிசி மூட்டைகள்

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மாலை என இரு வேளைகளில் பணியாளர்கள் சுமார் 12 பேர் சமையல் உள்ளிட்ட இதர பணிகளைச் செய்து வருகின்றனர்.

மேலும் அம்மா உணவகத்தில் காலை இட்லி, சாம்பார், மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் என தினமும் சுமார் 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக அம்மா உணவகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், வெளியில் இருந்து அரிசி வாங்கி சமைத்ததாகவும் கூறப்படுகிறது. 

துறையூர் நகராட்சியில் குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்படும் மினி ஆட்டோ வாகனத்தில் அம்மா உணவகத்திற்கு அரிசி மூட்டைகள் வந்திறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாமர மக்கள் அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர் மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய மக்கள் பசியாறும் உணவுக்குண்டான அரிசியை நகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் குப்பை வாங்க பயன்படுத்தும்

மினி ஆட்டோவில் சுகாதார அதிகாரியின் மேற்பார்வையில் அரிசி வந்து இறங்கிய நிகழ்வு பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் மற்றும் பொது மக்களை முகம் சுளிக்கும் வண்ணம் அமைந்தது. மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பற்றி துறையூர் நகர்மன்றத் தலைவரான செல்வராணியிடம் கேட்ட போது, “அம்மா உணவகத்தில் அரிசி தட்டுப்பாடு கடந்த ஒரு வார காலமாக இருந்து வந்துள்ளது.

எனது கவனத்திற்கு பணியாளர்கள் நேற்று முன்தினம் தான் தனக்கு தெரியப்படுத்தினர். உடனடியாக தேவைப்படும் அரிசி மூட்டைகளை ஏற்பாடு செய்து அதனை தனியாக வாடகை வண்டி மூலம் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினேன். ஆனால் இடையில் ஏதோ தவறு நடந்துள்ளது. எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார்.

துறையூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளரின் நேரடிப் பார்வையில் உள்ள அம்மா உணவகத்தில் தரம், சுகாதாரம் உள்ளிட்டவற்றை தினந்தோறும் ஆய்வு செய்து, சுத்தமான உணவை வழங்கிட வேண்டிய நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மெத்தன போக்கால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *