கோடிக்கணக்கில் மோசடி! சிக்கிய திருச்சி தனியார் வங்கி ஊழியர்கள்!!

கோடிக்கணக்கில் மோசடி! சிக்கிய திருச்சி தனியார் வங்கி ஊழியர்கள்!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஒரு தனியார் வங்கி இயங்கி வருகிறது. இங்கு மகளிர் சுய உதவிக்குழு கடன், அடமான கடன், வீட்டுப்பத்திரம் அடமானகடன், நகைகள் அடமான கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வங்கியில் கடந்த மாதம் வாடிக்கையாளர் ஒருவர் தான் அடமானம் வைத்த நகைக்கு வட்டி கட்ட வந்துள்ளார்.அப்போது நகை மதிப்பீட்டாளராக இருந்த சிவந்தி லிங்கம், இன்னொரு நகைக்கு வட்டி கட்டாமல் உள்ளது அதை எப்போது மீட்க போகிறீர்கள் என கேட்டார்.அதற்கு வாடிக்கையாளர் அது என்னுடையதல்ல ஏற்கனவே இங்கு நகை மதிப்பீட்டாளராக இருந்த பாலசுப்ரமணியன் எனது பெயரில் வைத்துள்ளார் என தெரிவித்தார்.

இதையடுத்து கிடப்பில் இருந்த அந்த அடமான நகைகளை பரிசோதனைக்கு உட்படுத்த போது அவையனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து சிவந்தி லிங்கம் , புதிதாக வந்த கிளை மேலாளர் கெல்வின் ஜோஸ்வா ராஜிடம் நடந்த விபரத்தை தெரிவித்தார்.பின்னர் வங்கியில் இன்னும் இதுபோன்று போலி நகைகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளதா என தணிக்கை செய்யப்பட்டது.இதில் 250 பவுன் மதிப்பில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ 50 லட்சம் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கிளை மேலாளர் கெல்வின் ஜோஷ்வா ராஜ் திருவெறும்பூர் போலீசில் புகார் அளித்த போது, இந்த வழக்கு மாவட்ட பொருளாதார குற்ற பிரிவு போலீசாருக்கு சென்றது.இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் டிஎஸ்பி சிவசுப்ரமணியன் தலைமையில் மாவட்ட குற்ற பிரிவு ஆய்வாளர் உஷாநந்தினி விசாரணை நடத்தினார். விசாரணையில் போலி அடமான நகைகளின் விபரம் வெளிச்சத்திற்கு வந்தது.

Advertisement

திருவெறும்பூர் கிளையில் ஏற்கனவே மேலாளராக இருந்தவர் பிரவீண்குமார்.
இவரும் , நகை மதிப்பீட்டாளராக இருந்த பாலசுப்ரமணியன் இருவரும் கூட்டாக சேர்ந்து வாடிக்கையாளர் பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்து சுமார் இரண்டு வருட காலமாக போலி நகைகளை வைத்து மோசடி செய்து பணம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு உதவியாக வங்கியில் கலெக்சன் பிரிவு, மற்றும் கடன் வழங்குதல் பிரிவுகளில் வேலை பார்க்கும் யோகராஜ், வடிவேல், ராஜேந்திரன், சிலம்பரசன்
ஆகிய 4 பேரும் உடந்தை செயல்பட்டுள்ளனர்.வாடிக்கையாளர்களுக்கு கடன் ஏற்பாடு செய்யும் போது வாடிக்கையாளர்களிமே கூடுதலாக ஆவணங்களை பெற்று கொண்டு அதன் மூலம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.


மேலும் நகை அடமானம் வைக்க வரும் வாடிக்கையாளர்களிடம் லாவகமாக பேசி கவரிங் நகைகளை வாடிக்கையாளர்கள் பெயரிலே அடமானம் வைத்துள்ளனர் இந்த மோசடி பேர்வழிகள் கடந்த 2018 ம் ஆண்டு முதல் இதுவரை 80 வாடிக்கையாளர்களின் பெயரில் 250 பவுன் வரை அடமானம் வைத்து ரூ 50 லட்சம் மோசடி செய்துள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நகை மதிப்பீட்டாளார் பாலசுப்ரமணியனும், கிளை மேலாளர் பிரவீன் குமாரும் வேறொரு கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதனால் புதிதாக வந்த கிளை மேலாளர், மற்றும் நகை மதிப்பீட்டாளரால் இந்த உண்மை வெளியே வந்தது.


இந்த மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்களான பிரவீன் குமார் ,யோகராஜ், வடிவேல், பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன் மற்றும் சிலம்பரசன் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதியபட்டது.இதில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்த பாலசுப்ரமணியன் கடந்த மாதம் இறந்துவிட்ட இந்நிலையில் மீதமுள்ள 5 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டனர்.வங்கியில் நடைபெற்ற நூதன மோசடியால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் எற்படுத்தியது.