கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பொன்னணியாறு அணை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், கண்ணூத்து ஏரிக்குக் காவிரியில் வெள்ள காலங்களில் கிடைக்கும் உபரிநீரை நீரேற்றம் மூலம் கொண்டு செல்லும் திட்டத்தின் ஆய்வுப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (04.10.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன் இ.ஆ.ப., முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்குப் பின், அமைச்சர் செய்தியாளர்களிடம் இத்திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
காவேரி உபரிநீரை நீரேற்றம் மூலம் கொண்டு செல்லும் இந்தத் திட்டத்தின் ஆய்வுப் பணிக்கான மதிப்பீட்டுத் தொகை ரூ.83.00 இலட்சம் ஆகும் என அமைச்சர் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக நீர்வரத்துக் குறைந்து, கடந்த 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு முழுக்கொள்ளளவை எட்டாத பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து ஏரிக்கு, வெள்ள காலங்களில் காவிரியில் வீணாகும் உபரிநீரைக் கொண்டு வந்து, நிலத்தடி நீர் செறிவூட்டுவதுடன் விவசாயப் பாசன வசதியையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவதால் முகவனுர், செக்காணம், பாளையகோட்டை மற்றும் எலமணம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும்.
பொன்னணியாறு அணை மூலம் 2101 ஏக்கர் மற்றும் கண்ணூத்து ஏரி மூலம் 733 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
காவிரியின் படுகை மட்ட அளவைவிட பொன்னணியாறு அணை தோராயமாக 195 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மேலும், காவிரியில் இருந்து தோராயமாக 54.50 கி.மீ தொலைவில் இந்த நீர்ப்பாசனப் பகுதிகள் அமைந்துள்ளன. எனவே, நீரேற்றம் (Pumping) மூலமே நீரை கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மணப்பாறை பகுதி விவசாயிகள் மற்றும் பாசன சங்கங்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து ஏரிகளுக்கு நீர் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ரூ.83.00 இலட்சம் மதிப்பீட்டில் கருத்துரு தயாரிக்கப்பட்டு, தலைமைப் பொறியாளர் திட்ட உருவாக்கம், சென்னை அவர்களிடமிருந்து மேல்நடவடிக்கைக்காக அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்.
இறுதியாக, இத்திட்டம் இப்பகுதி விவசாயிகளுக்குக் குடிநீர், விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கான நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாநிலங்களவை உறுப்பினர் திருமதி. ராஜாத்தி (எ) கவிஞர் சல்மா , மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு. ப. அப்துல்சமது , நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்க மாநில தலைவர் திரு. விஸ்வநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாயப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments