திருச்சி | ஜனவரி 16, 2026
திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான சோழன் விரைவு ரயில் நிறுத்தம் குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் மற்றும் திருச்சி இடையே இயக்கப்படும் 22675/22676 சோழன் விரைவு ரயில் (Cholan Superfast Express), இனி திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சகம் நேற்று (ஜனவரி 15) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. துரை வைகோ அவர்கள் மேற்கொண்ட தொடர் சட்டப்போராட்டத்திற்கும், முயற்சிகளுக்கும் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
ஓராண்டு காலத் தொடர் முயற்சி:
இந்த ரயில் நிறுத்தத்திற்காக கடந்த 2024-ம் ஆண்டு முதலே எம்.பி துரை வைகோ பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்,

டிசம்பர் 12, 2024: திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் முதல் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
டிசம்பர் 18, 2024: டெல்லியில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து இதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மார்ச் 27, 2025: தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு ரயில் நிறுத்தத்தின் தேவை குறித்து விரிவான கடிதம் அனுப்பப்பட்டது.
டிசம்பர் 10, 2025: நாடாளுமன்றக் கேள்வி நேரத்தில் திருவெறும்பூர் ரயில் நிறுத்தம் குறித்து துரை வைகோ கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சகத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைத்தது.

இந்த வெற்றி குறித்துப் பேசிய துரை வைகோ, மக்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும் போதெல்லாம் எனது உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதாக உணர்கிறேன். இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது மக்கள் பணி என்றும் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments