இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (22.07.2025) காலை 10 மணியளவில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
காங்கிரஸ் பேரியக்கத் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் தலைமையிலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற இக் கூட்டத்தில், மறுமலர்ச்சி திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினரும் இயக்கத் தந்தையுமான தலைவர் திரு. வைகோ அவர்களும், மக்களவை உறுப்பினரான நானும் கலந்துகொண்டோம்.
நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதக் குழு குறித்து ஒன்றிய அரசு இதுவரை தெளிவான தகவல்களை வழங்கவில்லை. மேலும், ஆபரேஷன் சித்தூர் தொடர்பான விவாதத்திற்கு எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இப்பிரச்சினையை முதன்மையாக எழுப்பி, நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் ‘Special Intensive Revision – SIR’ என்ற வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு முயற்சி, ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறையால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதனால், பல கோடி மக்களின் வாக்குரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை விரைவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவாக்கப்படலாம் என்பதால், இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும், ஒன்றிய பாஜக அரசு இதனை நிறுத்தும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபடவும் முடிவெடுக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து திமுக சார்பில் திருமதி. கனிமொழி, திரு. டி.ஆர். பாலு, திரு. திருச்சி சிவா ஆகியோரும், விசிக சார்பில் திரு. தொல். திருமாவளவன், திரு. ரவிக்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.
Comments