கொரோனா காலகட்டத்திலும் மனித கழிவுகளால் சுற்றுச்சுழலை பேணிக்காப்பவர்! உலக சுற்றுச்சூழல் தின ஸ்பெஷல்!

கொரோனா காலகட்டத்திலும் மனித கழிவுகளால் சுற்றுச்சுழலை பேணிக்காப்பவர்! உலக சுற்றுச்சூழல் தின ஸ்பெஷல்!

மனிதர்கள், மிருகங்கள், செடி கொடிகள் என பல உயிரினங்கள் பூமியை சார்ந்தே வாழ்கின்றன. ஆனால், மனித இனம் மட்டும் தனது அன்றாட வாழ்வில் இந்த சுற்றுச்சூழலிற்கு எந்த அளவிற்கு தீமையை இழைக்கிறது என்பது உணரப்படாத ஒன்று. மாசடைந்து சுவாசிக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இப்பூமியினை காப்பாற்ற மனித இனத்தில் சில நல்லுள்ளங்கள் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் திருச்சியை சேர்ந்த சுப்புராமன்.

நாம் வாழும் வீட்டினுடைய கழிவு நீர், இதர கழிவுகள் என அனைத்தும் எங்கே செல்கிறது என நாம் கண்டுகொள்வதேயில்லை! பொதுவாக அவற்றை கழிவுநீர் கால்வாய் மற்றும் தெருக்களில் கலக்க விட்டு விடுகிறோம். ஆனால் சுப்புராமனின் வீடோ இதற்கு விதிவிலக்கு. அவரது வீட்டிற்கு சென்ற நமக்கு பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் கிடைத்தன. அதனை திருச்சி விஷன் சார்பாக பதிவு செய்கிறோம்!

சுற்றுச்சூழல் சார்ந்த ஓர் வீடு! மின்சாரத்திற்கு சூரிய ஒளியும்,சமைப்பதற்கு கழிவுநீர் சுத்திகரிப்பு எரிவாயும், கழிவு நீரை வெளியே செல்லாமல் தடுக்க மழைநீர் சேகரிப்பு தொட்டியும், மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய நாப்கின்களை எரிக்க தனி இடமும், மக்கும் குப்பை மக்காத குப்பை என மறுசுழற்சி செய்ய ஒரு இடமும், கொரோனா காலகட்டத்தில் தண்ணீரை பயன்படுத்த புது வழிமுறைகள் என இயற்கையோடே ஒன்றி வாழும் வகையில் தனது வீட்டையே மாற்றியமைத்து அசத்தி வருகின்றார் 71 வயதான சுப்புராமன்!

சுப்புராமன்!

யார் இவர்? திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் எம்.சுப்புராமன். ஸ்கோப் (Scope) தொண்டு நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். 2005 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் சிறந்த என்ஜிஓ விருது, 2006ஆம் ஆண்டு அப்துல் கலாமின் கைகளால் விருது என இவரது சாதனைகளுக்கான அங்கீகாரங்கள் இவரது வாழ்வை அலங்கரிக்கின்றன. திருச்சியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இன்றளவும் இவருடைய சூழல் மேம்பாட்டு கழிவறையை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தனி சிறப்பு. தமிழகம் முழுவதும், இந்தியா, சீனா, ஜப்பான், நெதர்லாந்து,பிரான்ஸ், அமெரிக்கா என பல நாடுகளின் சுற்றுச்சூழல் மேம்பாடு கழிவறைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியவர்! 1980 கால கட்டங்களில் திருச்சியில் மக்கள் பலருக்கு தங்களுடைய வீடுகளில் கழிப்பறை அவசியம் என அரும்பாடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்களில் இவரும் ஒருவர்!

தற்போது திருச்சியில் ஸ்கோப்(SCOPE) என்னும் தொண்டு நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் பல சமுதாய மக்களுக்கு தன்னால் இயன்ற வகையில் விழிப்புணர்வு பணிகளையும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு கழிவறை பற்றிய முக்கியத்துவத்தையும் வழங்கிவரும் ஆகச் சிறந்த மனிதர்! திருச்சி மாதவிடாய் சுகாதார மேலாண்மை கூட்டமைப்பில் இணைந்து பணியாற்றி வருபவர்! ஊருக்கு மட்டும் உபத���சம் செய்வது இவரது வழக்கமல்ல. தன்னுடைய வாழ்விலும் அதே நெறிமுறைகளை கடைப்பிடித்து வாழ்ந்து வரும் ஒரு மனிதர்!

Advertisement

திருச்சி விஷன் சார்பாக சுப்புராமனை நேரில் சந்தித்து பேசினோம்… அப்போது அவர் கூறுகையில்…"1970 காலகட்டங்களில் குறைந்த விலையில் தரமான மழைநீர் சேகரிப்பு தொட்டிகளும், கழிவறைகள் கட்டுவது போன்ற பயிற்சியிலும் ஈடுபட்டோம். முதன்முதலாக புதுக்கோட்டை மாவட்டம் மதகம் கிராமத்தில் சமுதாய சுகாதார வளாகம் கட்டினோம். இது கட்டுவது மட்டுமல்லாமல் மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு,மரம் நடுதல் பற்றிய விழிப்புணர்வை கொடுத்து வந்தேன். 1986ம் ஆண்டு ஸ்கோப் என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கினேன்.சுற்றுச்சூழல் சார்ந்த எளிமையான முறையில் கழிவறைகளை 200 ரூபாயிலிருந்து 1200 ரூபாய்க்குள் கட்டி கொடுத்தேன். அப்போதைய கால கட்டங்களில் கழிவறை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லாத காரணத்தினால் கழிவறையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் ஆற்றினேன்" என்றார்.

கழிவறை கட்டினால் தண்ணீர் பிரச்சனை வரும் என சிலர் கூறியபோது, அதற்கு ஏற்றார்போல வடிவமைத்து சூழல் மேம்பாட்டு கழிவறையை தரைக்கு மேலே சில அடிகள் உயரத்தில் கட்டி தான் நினைத்த செயலை சாத்தியமாக்கி உள்ளார், சுப்புராமன் .அவரது இந்த செயல், திருச்சி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமா? அவர் செய்த இந்த சாதனைக்கு திருச்சி மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் சாந்தா மற்றும் தமிழக அரசு சார்பில் பாராட்டுக்களும் குவிந்தன.

ஒவ்வொரு வீட்டிலும் தொடங்குகிறது ஒரு நாட்டின் எதிர்காலம். அதனை கருத்தில் கொண்ட சுப்புராமன், தனது வாழ்க்கை முறையை சுற்றுச்சூழலை பாதுக்காக்கும் வகையில் மாற்றியமைத்துள்ளார். அவரது வீட்டில் இருந்து 'zero waste' வெளியே செல்கிறது என்றால் அதனை நம்பவா முடிகிறது? அவர் அதனை செய்வதற்கு எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் அவரது குடும்பம் சலிக்காமல் துணை நின்றுள்ளது.

சூரிய ஒளியுடன் சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு வீடாக மாற்றியமைத்து அதில் வசித்து வரும் இவரது குடும்பத்தினர், வீட்டில் உள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்து அவற்றை தினமும் பயன்படுத்தும் எரிவாயுவாகவும் மாற்றி அமைத்து வருகின்றனர். மாதவிடாய் காலங்களில் சுப்புராமனின் வீட்டில் உள்ள பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் கூட மறுசுழற்சி செய்யப்பட்டு எரிவாயு ஆக மாற்றப்படுகிறது. மேலும், சிறுநீர் மற்றும் மனித கழிவுகளை சுத்திகரித்து வீட்டு மரங்களுக்கு உரமாக பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தையும் கையாண்டு வருகிறார், சுப்புராமன்.

தற்போது அதிக பயன்பாட்டில் இருக்கும் "western toilet"-லும் புதிய மாற்றத்தை உண்டாக்கியுள்ளார் சுப்புராமன். ஒவ்வொரு முறையும் 'flush' செய்யும்போதும், சுமார் 8 லிட்டர் நீர் வீணாகிறது. தண்ணீரை சேமிக்கும் நோக்கத்தோடு ஜப்பான் நாட்டில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள அதி நவீன மேற்கத்திய கழிவறையை தனது வீட்டிற்கும் வடிவமைத்துள்ளார். கை கழுவும் 'wash basin'-யை கழிவறையின் 'flush' உடன் இணைத்துள்ளார். ஒவ்வொரு முறை கை கழுவும்போதும், அதற்கு செலவாகும் தண்ணீர் நேராக கழிவறையின் 'flush'-ற்கு சென்று தேங்கிவிடுகிறது. பின்னர் அந்த நீர் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. இதுவே இவரது‌ சமீபத்திய சாதனை.

" தண்ணீரை சேமிப்பது மிக முக்கிமான ஒன்று. இந்த முறை மூலம் தண்ணீர் அதிகளவில் சேமிக்க முடிகிறது. ஐஏஎஸ் சாந்த ஷீலா-வின் அறிவறையின்படி இதனை‌செய்து முடித்துள்ளேன்", என கூறுகிறார் சுப்புராமன். சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வரும் சுப்புராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் உண்மையாகவே திருச்சியின் பொக்கிஷங்களே.

https://youtu.be/5NyKH4IxPIM