Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (JAMBOREE) மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழா

திருச்சிராப்பள்ளி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (JAMBOREE) மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழா (28.01.2025) அன்று முதல் (03.02.2025) வரை நடைபெறுவதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாகவும், விரைவாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பாரத சாரண சாரணியர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் முடிவடைவதை முன்னிட்டு வைரவிழா தேசிய திரளணியாகவும். (Dimanon Jubilee National Jamboree) முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு விழா நடைபெறவுள்ளது. அதனடிப்படையில், பாரத சாரண சாரணியர் இயக்க, தேசிய தலைமையகத்தின் அனுமதியோடு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனைகளின்படி திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் வருகின்ற (28.01.2025) முதல் (03.02.2025) வரை பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருந்திரளணி (Special Jamboree) மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்ட உள்ளனர். இந்நிகழ்வில் சாரணர்கள் தங்குவதற்காக 1000 கூடாரங்கள், சாரணியர்கள் தங்குவதற்காக 900 கூடாரங்கள். திரிசாரண சாரணியர்கள் தங்குவதற்காக 450 கூடாரங்கள், ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்கள் தங்குவதற்காக 40 கூடாரங்கள், அலுவலகப்பணிக்காக 32 கூடாரங்கள் என மொத்தம் 2,422க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் 2000க்கும் மேற்பட்ட குளியல் அறைகள் மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், இந்த கூடாரத்தில் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதையும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு அவர்களின் உணவு முறைக்கு ஏற்றார்போல் உணவு தயாரித்து வழங்கிடும் வகையில் 72 சமையல் செய்யும் கூடங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட உணவு அருந்தும் கூடங்கள் அமைக்கப்பட்டு வருவதையும், இந்த விழா நடைபெறும் வளாகத்தின் அனைத்துப்பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் 350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு வருவதையும்,

சாரண சாரணியர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிடும் வகையில் உணவுப்பொருட்கள் பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் விற்பனை செய்யும் வகையில் 50 க்கும் மேற்பட்ட கடைகளுடன் கூடிய மார்க்கெட் பகுதி அமைக்கப்பட்டு வருவதையும், அனைத்துப் பகுதிகளுக்கும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கிடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் தேவைக்கேற்றார் போல் பயன்படுத்திடும் வகையில் ஜெனரேட்டர் வசதி அமைக்கப்பட்டுள்ளதையும்

மேலும் 25 படுக்கை வசதிகளுடன் கூடிய 2 மருத்துவமனைகள் மற்றும் 15 நடமாடும் மருத்துவ வாகனங்கள், அவசர உதவிக்காக 15 ஆம்புலன்ஸ் வாகனங்களும் விழா நடைபெறும் வளாகத்தில் அமைப்பதற்கான பணிகளையும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் சார்பில் தேவையான இடங்களில் தீயணைப்பு வாகனங்களையும், தீயணைப்பு கருவிகளும் வைக்கப்படவுள்ள இடங்களையும் இன்று (19.01.2025) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் / தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் / தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில்…. சாரண சாரணியர் ஜாம்புரி நிகழ்வு நடைபெறும் வளாகத்தில் இயற்கை பேரிடரில் இருந்து மாணவ மாணவிகள் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது பற்றிய பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. மேலும் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சி அளிப்பதற்கான தலங்களும் உருவாக்கப்பட இருக்கிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகைதர உள்ள மாணவ, மாணவியர்களின் கலை மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் அரங்கேற இருக்கின்றன. அரங்குகளில் தமிழ்நாடு மொழி கலாச்சாரம் பண்பாடு குறித்த சொற்பொழிவு பேச்சாளர்களைக் கொண்டு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. கலைஞர் பெயரில் இந்த ஜாம்புரி நிகழ்வு நடைபெறுவதால் தமிழகத்திற்கு அவர் செய்த சாதனைகளை விளக்கிடும் வகையில் கண்காட்சி அரங்கம் அமைய இருக்கிறது. பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மாணவ மாணவியர் வருவதால் பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்நிகழ்விற்கு பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட எல்லை வர அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.

இந்நிகழ்விற்கு மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது அவர்களை வரவேற்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். மாணவ – மாணவியர் தனித்தனியாக தங்குவதற்கு அவர்களுக்குரிய கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான உணவு தண்ணீர கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மிகச் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாநில முதன்மை பேராணையர் பாரத சாரண சாரணியர் இயக்கம் பெருந்திரளணி பொறுப்பாளர் அறிவொளி, மாநில கல்வி இயக்குநர் பழனிச்சாமி, சாரணர் இயக்க தேசிய ஆலோசகர் ராஜ்குமார் கௌசிக், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *