Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் மாரியம்மன், வெக்காளியம்மன் கோவில் தேர்திருவிழா- முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனை கூட்டம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வருகின்ற 15.04.2025 செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்ற சித்திரைத் தேர்த் திருவிழா மற்றும் உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயிலில் வருகின்ற 14.04.2025 திங்கட்கிழமை நடைபெறவுள்ள சித்திரைத் தேர்த் திருவிழாவிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுப் பணிகள் குறித்து

அரசுத் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் மற்றும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்களில் நடைபெறவுள்ள சித்திரைத் தேர்திருவிழாவினையொட்டி பெருமளவில் பக்தர்கள் வருகை தருவதை முன்னிட்டு காவல்துறையினர் பக்தர்கள் திருக்கோவிலுக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தேவையான பாதுகாப்பு

ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். மேலும் திருக்கோயிலின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின்சார வாரிய அலுவலர்கள் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கும், பழுது ஏற்பட்டால் உடனே நிவர்த்தி செய்திடும் வகையில் தேவையான அளவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் அமைத்தல், தேவையான இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வசதி. கூடுதல் முதலுதவி முகாம் மற்றும் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் குண்டு குழிகள் இல்லாமல் ஒரே சீராக மண் அமைப்பு ஏற்படுத்தி, எளிதாக பக்தர்கள் நடந்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும், தேசிய நெடுஞ்சாலையில் தேவையான அளவு தற்காலிக மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும்.

தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு வாகனம் மற்றும் முதலுதவிக்குழுவுடன் தீயணைக்கும் உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட சுகாதாரப் பணியாளர்களை கூடுதல் அளவில் நியமனம் செய்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் அதற்கான முறையான அனுமதி பெற்று உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிய இடத்தில் வழங்க வேண்டும். தரமான உணவு

வழங்குவதை உணவு பாதுகாப்புத்துறையினர் உறுதி செய்திட வேண்டும். அனுமதி பெறாத இடங்களில் அன்னதானம் கண்டிப்பாக வழங்க கூடாது. திருக்கோயில் சிறப்பு பணியாளர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும். திருக்கோயில் பெருந்திட்ட வளாகப் பகுதியில் தேவையான அளவில் கட்டணமில்லா கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்வசதி மற்றும் ஜெனரேட்டர்கள் அமைத்தல், முடிக்காணிக்கை செலுத்திய பக்தர்கள் குளிப்பதற்கு ஆண்கள். பெண்கள், தனியே குளியல் தொட்டி, உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட வசதி செய்து கொடுத்தல் வேண்டும்.

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 14.04.2025ம் தேதி திங்கட்கிழமை வெள்ளிக்குதிரை வாகனப் புறப்பாடு அன்று திருக்கோயில் நடைசாத்தப்படாமல் இரவு முழுவதும் பக்தர்கள் தரிசிக்கும் வகையில் திறந்து வைக்கப்படும். அதற்கேற்ப திருக்கோயில் பணியாளர்களை சுழற்ச்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்து பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மேலும் பேருராட்சி சார்பில் தேரோடும் வீதிகளில் ஆக்கரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்ற வேண்டும்.

மேலும் அங்குள்ள கடைகளில் மின்கசிவு ஏற்படா வண்ணம் பாதுகாப்பு மின் சாதனங்கள் பொறுத்தப்பட்டுள்ளதா என்பதை மின்சாரத்துறை ஆய்வு செய்ய வேண்டும். பக்தர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்கள், குரங்குகள் மற்றும் மாடுகளை திருக்கோயில் வளாகத்தில் சுற்றித்திரிவதை கண்டறிந்து உரிய மருத்துவ முறையில் வனத்துறை, கால்நடைத்துறை அறிவுரைப்படி அப்புறப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீர்வளத்துறையின் சார்பில் பெருவள மற்றும் புள்ளம்பாடி வாய்காலில் தேவையான அளவு தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை சார்பில் தெப்பம், தேர் மற்றும் தேர் ஓடும் வீதிகளை ஆய்வு செய்து தேர் செல்வதற்கு தகுதியானது என்பதற்கு உறுதிச்சான்றிதழ் வழங்க வேண்டும்.

போக்குவரத்து துறையின் சார்பில் சமயபுரத்திற்கு திருச்சி மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்லும் வகையில் கூடுதல் பேருந்து வசதி ஏற்பாடுகள் செய்ய வேண்டும். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் புறவழிச்சாலை மருதூர் பிரிவுரோடு, வி.துறையூர் பிரிவுரோடு, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கரியமாணிக்கம் பிரிவு ரோடு. சமயபுரம் நால்ரோடு, சமயபுரம், மண்ணச்சநல்லூர் பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பணிகளை முறையாக கண்காணித்து சீர் செய்ய வேண்டும். தேர்த் திருவிழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும், கோயில் நிர்வாகமும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அதியமான் கவியரசு சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் இணை ஆனையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், அரசுத்துறை உயர் அலுவலர்கள். இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *