Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திமுக–காங்கிரஸ் கூட்டணி நிலையானது அல்ல: திருச்சி வேலுச்சாமி விமர்சனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி, திருச்சி உறையூர் பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்:—

நான் உள்பட அரசியல் கட்சியில் யாராக இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான் நோக்கம். மக்களுக்கு ஜனநாயக நாட்டில் என்ன தேவை உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை ஆகும். மேலும் மனிதனுக்கு சுதந்திரம் குறிப்பாக பாதுக்காப்பு வேண்டும். ஆனால் எதுவும் இல்லை, எனக்கு பெண் பேரபிள்ளைகள் உள்ளனர்.

தூத்துக்குடி அருகே பெண் பிள்ளைக்கு பாலியல் தொந்தரவை விட, கிருஷ்ணகிரி அருகே நடந்தது கொடூரத்தின் உச்சம். 2 வயது பெண் குழந்தை பாதிப்பு. மிருகங்கள் கூட இப்படி நடக்காது. காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளார்கள். இப்படி நடந்ததை மட்டுமே இந்த ஆட்சிக்கு குறை என்று சொல்ல மாட்டேன். இதுபோன்ற சம்பவம் நடைபெற்ற பிறகு இந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அணுகுமுறை தான் என்ன.

இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ஆளுங்கட்சி திமுகவின் இளைஞர் அணி தலைவர். இவரை காவல்துறையினர் கைது செய்து ராஜாவை அழைத்துச் செல்வது போன்று செல்கிறார்கள். இதைவிட குடும்பஸ்தர்களுக்கு அச்சம் தரக்கூடிய செயல் ஏதாவது இருக்க முடியுமா என்றார். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் ஆட்சி அமைய வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்கள் நம்பிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருப்பார்கள்.

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விஜய்யை விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். இதில் எந்த தவறான தகவலை பரப்ப வேண்டாம். விஜய் மட்டுமல்ல மற்றவர்களையும் விசாரணைக்கு அழைத்துள்ளார்கள், வேண்டுமென்றால் சிபிஐ என்னை அழைத்தாலும் நான் விசாரணைக்கு செல்ல தயார். இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை, விசாரணை முழுமையாக முடிந்த பிறகு நியாயம் கிடைத்தால் போதும்.

இன்று தமிழ்நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளில் என்னை விட சீனியார் யாரும் கிடையாது. நான் அரசியலுக்கு வந்தது பதவிக்காகவோ, பணத்திற்காகவோ அல்ல. ஆகையால் நான் என்னுடைய கருத்துகளை சுதந்திரமாக சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த ஆட்சி இருக்கக் கூடாது என்று நினைத்ததில் காங்கிரஸ் தொண்டர்களில் நானும் ஒருத்தன். இந்த கருத்துக்களை நாங்கள் தான் உருவாக்கினோம், ஆனால் தமிழ்நாட்டிற்கு என்ன சாபமோ அது நடக்கவில்லை. காங்கிரஸ் தலைமை சரியான முடிவை எடுத்திருந்தால் தமிழ்நாட்டிற்கு இன்னும் பல நன்மைகள் நடந்திருக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

அரசியலில் எதுவும் நடக்கலாம் எப்போதும் நடக்கலாம் என்று நம்பக்கூடிய எதார்த்தவாதி நான். இந்த முடிவு தான் நிரந்தரம் என்று நான் நினைக்கவில்லை, கூட்டணி கையெழுத்து போட்டவுடன் அது ஒன்றும் கல்வெட்டு சாசனம் கிடையாது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி கையெழுத்து போடும்போது 5 முனிசிபாலிட்டி சேர்மேன் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்கள்.

அப்போது கையெழுத்து போட்டீர்கள் ஏன் ஒதுக்கவில்லை என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. அது போன்று தான் தற்போது கையெழுத்து மட்டும்தான் போட்டு உள்ளார்கள், இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என அர்த்தம் அல்ல, இதற்கு பல உதாரணத்திற்கு திமுகவே காரணமாக இருந்துள்ளது.

தேர்தலுக்குப் பிறகு கூட்டணி மாறலாம் அல்லது வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு அதை திரும்ப பெற்று கூட்டணி அமைக்கலாம். இது போன்ற சம்பவம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் நடந்துள்ளது. ஆகையால் அரசியலில் எது வேணாலும் நடக்கலாம்.

தவெக – காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டும் என்று முதலில் கருத்தை முன் வைத்தது நான்தான். நான் வெட்கத்தை விட்டு சொல்கிறேன், எனது 6 வயது பேரக்குழந்தை சொல்லி தான் தெரியும், விஜய்க்கு பெரும் ஆதரவு உள்ளது என்பது.

ஆகையால் தான் தமிழ்நாட்டில் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று நான் எனது கருத்தை வெளிப்படுத்தினேன். அதனை தொடர்ந்து பலரும் அவர்கள் கருத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் யார் கண் பட்டதோ சிறிது தேக்கம் உள்ளது, ஆனால் இது நிரந்தரம் அல்ல, எதுவும் வரலாம்.

திமுக – பாஜக ஒன்றாக தான் செயல்படுகிறார்கள். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் பாஜகவின் தாய் ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ் பற்றி சிலர் தவறாக பேசுகிறார்கள், அது ஒரு சமூக சீர்திருத்த இயக்கம், திராவிட கழகம் போன்று என்று இந்தியாவிலேயே ஒரு தலைவர் சொன்னார் என்றால் அது கலைஞர் கருணாநிதி மட்டும்தான், இதற்கு உதாரணம் முரசொலி நாளிதழில் உள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக வரக்கூடாது என்று திமுக கூறுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பாஜக தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததே திமுக தான். குறிப்பாக தோழர் நல்லகண்ணு தேர்தலில் போட்டியிடும் போது அவரை தோற்கடித்து பாஜகவை சேர்ந்த வேட்பாளரை ஜெயிக்க வைத்தது திமுக தான்.

விஜய் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு திமுகவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றார். விஜய்க்கு தமிழ்நாட்டில் மக்களிடையே பெரிய அளவிற்கு ஆதரவு கிடைத்ததற்கு ஒரு முக்கிய காரணம் திமுக, விஜய்க்கு கொடுத்த நெருக்கடியும், கட்டுப்பாடுகளும் தான், இதை திமுக புரிந்துகொண்டால் அவர்களுக்கு நல்லது இல்லையென்றால் விஜய்க்கு நல்லது.

இன்றைய தேதியில் விஜய்க்கு மிகப்பெரிய மகத்தான சக்தி உள்ளது என்பது உண்மை. இதை எவ்வாறு கட்டுகோப்பாக அவர் கொண்டு போகிறார் என்பதை பொறுத்துதான் அமையும்.

தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டி இருக்கிறார்கள். இதைப் பற்றி பேசவில்லை என்றால் அவர்கள் மனிதர்களே அல்ல மிருகம் ஆவார்.

ஒவ்வொரு மனிதனும் தனக்கு நேரக்கூடிய பிரச்சனைகளை குறித்து எதிர்க்க வேண்டும். திருச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவன் ஒருவன் போதையில் இன்னொரு மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் இதுவரை வெளிய வரவில்லை தமிழ்நாட்டில் பாதுகாப்பே இல்லை என்றார்.

தமிழ்நாட்டில் இரண்டு வயது பெண் குழந்தையை பாலியல் தொந்தரவு கொடுத்த அவனை அடித்தே கொன்றாலும் தவறில்லை, இது போன்று பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் நடந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் கொலை செய்த வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை, மேலும் சொல்ல வேண்டுமென்றால் திமுகவின் முதன்மைச் செயலாளராக இருக்கக்கூடிய கே. என். நேரு அவர்களின் சகோதரர் ராமஜெயம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அப்போது அதிமுக ஆட்சி இருந்தது, அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்கள். தற்போது திமுக 5 ஆண்டு கால ஆட்சியில் அந்த வழக்கின் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு துப்பு இல்லை என குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,… எந்த பைத்தியக்காரன் கூறினானோ அவனை என்னிடம் அழைத்து வாருங்கள், கண்முன்னே இவ்வளவு குற்றங்கள் நடைபெறுகிறது. இதற்கு ஒரே தீர்வு மக்களிடையே புரட்சி ஏற்பட வேண்டும் மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று என்றார்.

திமுக – காங்கிரஸ் கட்சி கூட்டணியே தேவை இல்லை என்று எனது நிலைப்பாடு, வெற்றி பெறும் கட்சியோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் அதற்கான ஒரு சாட்சி. திமுக கட்சி ஆரம்பித்த வரலாற்றிலே மிகக் குறைவான கூட்டம் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் இருந்தது. கட்சியில் இருக்கக்கூடிய மூத்த நிர்வாகிகள், முக்கிய நிர்வாகிகள் மத்தியிலேயே பெரும் அதிருப்தி உள்ளது. இதை திமுக தலைமை புரிந்து கொள்ளவில்லை என்றால் 3 மாதங்கள் கழித்து ஆறுதல் கூற கூட யாரும் இருக்க மாட்டார்கள்.

அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. இதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த அவர்.. திமுகவும்- பாஜகவும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

இது போன்ற ஒரு குற்றச்சாட்டு மத்திய அமைச்சராக இருந்த சீ.டி. கிருஷ்ணமாச்சாரி மீது எழுந்தது. இந்த குற்றச்சாட்டில் இருந்து நான் வெளியே வந்ததும் நான் மந்திரியாகிறேன், என்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றார். இத்தகைய தலைசிறந்த அரசியல்வாதிகள் இருந்த அரசியலில், இப்படியும் சிலர் கொள்ளை அடித்துக் கொண்டு இயல்பாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். குற்றம் செய்தவர்களுக்கு துணையாக ஒரு ஆட்சி நீதிமன்றம், சென்ற நிலை தமிழ்நாட்டில் தான் உள்ளது.

தவெக தலைவர் விஜய் – நடிகை திரிஷா ஆகியோர்களை பற்றி பரவும் கருத்துக்களுக்கு உங்களுடைய பதில் என்னவென்று கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த அவர்

முதல்வர் குடும்பத்தை பற்றி சில விஷயங்களை வெளியே சொன்னாள் நன்றாக இருக்காது. ஒருவர் மீது குற்றம் சாற்ற வேண்டும் என்றால் நாம் எந்த குற்றமும் செய்யாமல் இருக்க வேண்டும். நேர்மையாக இருப்பவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலை அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *