திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோலாகல சமத்துவ பொங்கல் – வெளிநாட்டினரும் மாட்டு வண்டி சவாரி, சிலம்பம், நடனத்தில் உற்சாகம் தமிழ்நாட்டின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை மற்றும் சமத்துவ பொங்கல் விழா, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாரம்பரிய சிறப்புடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, புதிய மண் பானையில் பாரம்பரிய முறையில் பொங்கல் சமைக்கப்பட்டு, இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் 25-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, தமிழர் பாரம்பரியத்தை நேரில் அனுபவித்தனர். அவர்கள் சிலம்பம் விளையாடி, நாட்டுப்புற நடனங்களை ஆடி, தாங்களே பொங்கல் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக பங்கேற்றனர். மேலும், வெளிநாட்டினர்கள் மாட்டு வண்டியில் பயணம் செய்து தமிழர் பாரம்பரிய போக்குவரத்து முறையையும் அனுபவித்தனர்.
இந்த நிகழ்வு விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தது. இதனைத் தொடர்ந்து, பானை அலங்காரப் போட்டி, கயிறு இழுத்தல், பம்பரம், உரியடி உள்ளிட்ட பாரம்பரிய கிராமப்புற விளையாட்டுகள் நடத்தப்பட்டு, விழா முழுவதும் உற்சாகமான சூழல் நிலவியது.
மாவட்ட ஆட்சியர் சரவணன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், தமிழர் கலாச்சாரம் உலக அளவில் பரவுவது பெருமைக்குரிய விஷயம் என்றும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இதில் பங்கேற்றது திருச்சிக்கு உலகளாவிய அடையாளம் பெற்றுத்தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாரம்பரிய இசை, நடனம், விளையாட்டுகள், மக்கள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழா, கலாச்சார ஒற்றுமையும், விவசாயிகளின் உழைப்பின் மகத்துவத்தையும் வெளிப்படுத்தும் விதமாக மகிழ்ச்சிகரமாக நிறைவடைந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments