விவசாய கூலி பணிகளுக்கு வேலை ஆட்கள் கிடைக்காத காரணத்தால், தேசிய ஊரக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திட வேண்டும், அரியாறு – கோரையாறு – உய்யக்கொண்டான் – குடமுருட்டி ஆறு – கொடிங்கால் ஆகியவற்றில் நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர பணிகளை துவங்க வேண்டும், ஆறு ஏரி குளங்கள் கண்மாய்கள் குட்டை ஆகியவற்றில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு உடனடியாக மீட்க வேண்டும்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் கடலுக்கு சென்று வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் கதவணைகள் தடுப்பணைகள் மூலம் நீரை சேமிக்க வேண்டும், காலநிலை மாற்றத்தாலும் இயற்கை பேரிடராலும் பாதிப்புக்கு உள்ளாகிய விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு பயிர் காப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டும்,
திருச்சி மாநகர் உட்பட்ட கே.சாத்தனூர் பஞ்சப்பூர் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான 100 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலங்களின் உள்ள ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும். திருச்சி மாவட்டம் அதவத்தூர் மேற்கு பகுதியில் உள்ள புதுக்குளம் நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்தவர்களின் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க வேண்டும்.
திருச்சி மாவட்டத்திற்குள் புதிதாக டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க கூடாது, சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டிற்கு நிவாரணம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் மா சின்னதுரை தலைமையில் 10 விவசாயிகள் காலை 6 மணிக்கு இந்த போராட்டத்தை தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments