திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 11064 மாணவர்கள் அனைவரும் உயர்கல்விக்கு செல்லும் வாய்ப்பை பெறவேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்வு மே மாதத்தில் இரண்டு கட்டமாக திருச்சி மற்றும் இலால்குடி கல்வி மாவட்டத்தில் நடைபெற்றது. இக்கல்லூரிக்கனவு நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள் மற்றும் உதவித்தொகை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனை மையம் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி மாவட்ட துணை ஆட்சியர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர், பல்தொழில்நுட்ப கல்லூரி முதல்வர், தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர், முதுகலை ஆசிரியர்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணினி விவரப்பதிவளார் ஆகியோர் கொண்ட குழு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டு, உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மைய உதவி எண்.9788859038 என்ற தொடர்பு எண் மூலம் மாணவர்களுக்கு தேவையான உயர்கல்வி சார்ந்த ஆலோசனைகளும், உதவித்தொகை மற்றும் சான்றிதழ் தேவை குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இம்மையத்தின் மூலம் 2919 உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு உதவி எண் மூலம் தொடர்பு கொண்டு உயர்கல்வியில் சேர ஆலோசனை வழங்கப்பட்டது. உயர்கல்வி சார்ந்த ஐயங்கள், உதவித்தொகை மற்றும் சான்றிதழ் தொடர்பாக உதவி எண் மூலம் தொடர்பு கொண்ட 327 மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மாவட்ட உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனை மையம் மூலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர்கல்வியில் சேராத 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் ஜீன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை நடத்தப்பட்டு, உயர்கல்வியில் சேராத பெற்றோர் அற்ற மாணவர்கள், உதவித்தொகை தேவையுள்ள மாணவர்கள் ஆகியோருக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்து, உயர்கல்வியில் சேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பெற்றோர் அற்ற 44 மாணவர்கள் மாவட்ட ஆலோசனை மையம் மூலம் உயர்கல்வியில் சேரவும், அன்பு கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாணவர்களுக்கான கல்வி கடன் ரூ.100 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதுவரையில் இம்மாவட்டத்தில் 4711 மாணவர்களுக்கு ரூ.114.29 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை உயர்கல்வில் சேர்க்கும் வகையில் 13.9.2025 அன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் நடத்தப்பட்டு அதில் 85 மாணவர்களுக்கு ரூ.8.37 கோடியும், 24.10.2025 அன்று நடைபெற்ற முகாமில் 109 மாணவர்களுக்கு ரூ.7.35 கோடி வழங்கப்பட்டுள்ளது.
916 வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் திறன் பயிற்சிக்கென 2734 மாணவர்கள் விண்ணப்பித்ததில் மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2188 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், 2024-2025 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற 11064 அரசுபள்ளி மாணவர்களையும் உயர்கல்வியில் சேர்க்கும் முயற்சியாக உயர்வுக்கு படி முகாமானது திருச்சி மற்றும் இலால்குடி கோட்டங்களில் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை வழங்கப்பட்டது.
உயர்வுக்குபடி முகாமிற்கு பிறகு உயர்கல்வியில்சேராத மாணவர்களை அடையாளம் கண்டு மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆலோசனையின் பேரில் பள்ளி தலைமையாசிரியர், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர், ஆஊ தலைவர், கிராம நிர்வாக அலுவலர், வார்டு உறுப்பினர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் அடங்கிய குழு அமைத்து அவர்களது வீட்டிற்கே சென்று உயர்கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து உயர்கல்வியில் சேர்ந்திட வழிவகுத்ததின் விளைவாக மொத்தம் உள்ள 11064 அரசுபள்ளி மாணவர்களில், கலை அறிவியல் பிரிவில் 6220 மாணவர்களும், பொறியியல் பிரிவில் 2275 மாணவர்களும், மருத்துவப்பிரிவில் 317 மாணவர்களும், மேலாண்மை பட்ட பிரிவில் 300 மாணவர்களும், கணினி பிரிவில் 451 மாணவர்களும், செவிலியர் பிரிவில் 210 மாணவர்களும், பல்தொழில்நுட்ப பிரிவில் 225 மாணவர்களும், பாராமெடிக்கல் பிரிவில் 244 மாணவர்களும், சட்டத்துறையில் 26 மாணவர்களும், தொழிற்கல்வி பிரிவில் 40 மாணவர்களும், வேளாண்மை பிரிவில் 77 மாணவர்களும் மற்றும் இதர பிரிவில் 479 மாணவர்களும் என ஆக மொத்தம் 10864 மாணவர்கள் (98 சதவீதம்) உயர்கல்வியில் சேர்த்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments