Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா – பச்சை பட்டினி விரதமிருக்கும் அம்மன்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் பிரசித்திப்பெற்ற ஸ்தலமாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மற்றும் சித்திரை தேர்த் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய், நொடிகள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.தேவர்களை இம்சித்த மகிஷாசூரனை புரட்டாசி மாதம் 9 நாட்கள் தவமிருந்து வதம் செய்தார் அன்னை ஆதிபராசக்தி.

மகிஷாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், தன் கோபம் தணியவும் சோழவள நாட்டின் காவிரி வடகரையில் வேம்பு காட்டில் கவுமாரி என பெயர் பூண்டு சிவப்பு நிறம் கொண்டு மஞ்சள் ஆடை தரித்து, உடல் முழுவதும் வாசனை புஷ்பங்களால் மலை போல் குவித்து உண்ணா நோன்பிருந்து பல ஆண்டு காலம் தவம் செய்து அதன் பயனாக சாந்த சொரூபிணியாக சர்வரட்சகியாகி மாரியம்மன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இந்த புராண வரலாற்றின் அடிப்படையில் தான் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அம்மன் பச்சை பட்டினி விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வருகிறார். பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ளும் மாரியம்மனுக்கு அந்த 28 நாட்களும் தளிகை, நைவேத்தியங்கள் படைக்கப்படாது. மாறாக, இளநீர், நீர்மோர், பானகம், கரும்புச் சாறு, துள்ளுமாவு போன்றவை மட்டுமே படைக்கப்படும்.

அப்போது உலக மக்களுக்காக பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ளும் அம்மனை குளிர்விக்கும் வகையில் அனைத்து வண்ண மலர்கள், வாசனை மலர்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது பூச்சொரிதல் திருவிழா என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல ஆயிரம் கிலோ பூக்கள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சாத்தப்படும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்காரிக்கப்பட்ட வாகனங்களில், மேளதாளங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வருவார்கள். மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் நிறைவு செய்யும் நாளில், சித்திரை தேரோட்ட விழா கொடியேற்றம் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுகான பூச்சொ ரிதல் விழா இன்று தொடங்கியது. இன்று அதிகாலையில் விக்னேஸ்வர பூஜை ,புண்ணியாகவாசனம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. காலை 7:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா தொடங்கியது. இந்நிலையில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சமயபுரம் கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் பக்தர்கள், கோயில் பணியாளர்கள் பூக்களை, தட்டுகளிலும், கூடைகளிலும் சுமந்து கொண்டு தேரோடும் வீதிகளில் வலம் வந்து அம்மனுக்கு பூக்களை சாத்தினர்.

இன்று முதல் 28 நாட்களுக்கு அம்மன் பச்சைபட்டினி விரதம் மேற்கொள்வார். பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதலே சமய புரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தலைமையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *