ஊரடங்கு காலத்திலும் இலவச தொழிற்கல்வி பயிற்சி! கலக்கும் திருச்சி இளைஞர்!!
கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையிலும் வீட்டிலிருந்தபடியே தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 500 நபர்களுக்கு தொழில் கல்வியை கற்றுத் தந்து சாதனை படைத்து வருகிறார் திருச்சி ராஜேஷ் கண்ணன். இவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பை காண்போம்.
இந்த ஊரடங்கு காலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயங்களை தங்களுடைய வாழ்க்கையில் கற்றுக்கொண்டோம்.தான் கற்ற தொழிற்கல்வி படிப்பின் மூலம் இளைஞர்கள், இளம் தொழில் முனைவோர், தொழிற்கல்வி மாணவர்கள், தொழிற்சாலை பயிற்றுநர்கள், தொழில் பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பயனடையச் செய்த நெகிழ்ச்சி மனிதர் இவர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் வெல்டிங் திறன் பயிற்சி வழங்கி வருகிறார். இவர் இயந்திரப் பொறியியல் படிப்பில் 2010ம் ஆண்டு கொங்கு பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். மேலும் வெல்டிங் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் திருச்சியில் பெல்(BHEL) வெல்டிங் ஆராய்ச்சி கழகத்தில் உள்ள வெல்டிங் மேற்பார்வையாளர்(CWI) பயிற்சி பெற்றுள்ளார்.தற்போது பெல் நிறுவனத்திற்கு வெல்டிங் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வெல்டிங் தொழில் நுட்பம் குறித்து பிஎச்டி படிப்பு படித்து வருகிறார்.
மேலும் இவரது தந்தை கனகசபாபதி நடத்திவரும் R.K மெட்டல்ஸ் நிறுவனத்தையும் கல்லூரி காலகட்டத்தில் இருந்தே கவனித்து வருகிறார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட வெல்டிங் தொழில்நுட்பத்திற்கான பயிற்சி மையத்தையும் நிர்வகித்து வருகிறார்.அசோக் லேலண்ட், குளோபல் டிவிஎஸ் உள்ளிட்ட பெருநிறுவனங்களுக்கான வெல்டிங் தொழில்நுட்ப ஆலோசகராகவும், பாரதமிகு மின்நிறுவனம், ரானே , பாதுகாப்புத்துறைக்கான தொழிற்சாலை ஆகியவற்றில் வெல்டிங் பிரிவுக்கான பதிவுபெற்ற பணி மேற்கொள்வதாகவும் உள்ளார்.
அப்பப்பா! இத்தனை பணிகளை மேற்கொள்ளும் ராஜேஷ்கண்ணனை நினைத்து பெருமூச்சு விடும் நாம்! இதுகுறித்து அவர் என்ன கூறுகிறார் என்பதை இந்நேரத்தில் பதிவு செய்கிறோம்.
"தற்போதைய இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் இளைஞர்களுக்கு பயனுள்ள பயிற்சி வகுப்பை நடத்த தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று இந்த முயற்சியை தொடங்கியுள்ளேன்.தமிழகம் முழுவதும் உள்ள பலரையும் இணையம் மூலமாக இணைத்து தொழில் கல்வியை அளித்து வருகிறேன்.தமிழ் ஆங்கிலம் என இருமொழிகளிலும் ஒலி-ஒளிக் காட்சிகளை பதிவேற்றம் செய்து சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பயிற்றுவித்து வருகிறேன்.
கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி வகுப்பில் தினந்தோறும் வெல்டிங் குறித்த செயல்முறை விளக்கம், முக்கியமான பற்றவைப்பு வகைகள், வெல்டிங் செயல்முறைகள் என 16 தலைப்புகளில் பயிற்சி வகுப்புகளை வெற்றிகரமாக முடித்துள்ளேன்.மேலும் அறிவு சோதனை செயல்முறை, வெல்டிங் மின்னோட்டம், மின்னழுத்தம் செயல்பாடு, வெல்டிங் குறியீடுகள் என தொடர்ந்து பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன்.முதலில் ஒரு வகுப்புக்கு 100 முதல் 150 பேர் வந்தனர். இப்போது மாணவர்கள், ஆசிரியர், தொழில் முனைவோர், பயிற்றுனர், பொறியாளர்கள், அலுவலர்கள் என ஒவ்வொரு வகுப்பிலும் 500 பேர் வரை கல்வி கற்கின்றனர். அதிகபட்சமாக 500 பேர் மட்டுமே இந்த முறையில் பயில முடியும். ஒவ்வொரு பயிற்சியிலும் ஏற்கனவே இணைந்தவர்கள் புதிதாக இணைபவர்கள் என முதலில் வரும் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர்.ஊரடங்கு காலத்தில் தமிழக தொழில்துறை வெல்டிங் பிரிவில் மட்டுமே இத்தகைய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரையும் வகுப்புகள் நடந்து வருகின்றனர்.பெரிய நிறுவனங்களில் தங்களது ஊழியர்களுக்கும் வகுப்புகள் நடத்தவும் கோரியுள்ளனர். முடிந்தவரை உதவி செய்து வருகிறேன் என்கிறார் ராஜேஷ் கண்ணன்.ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெல்டிங் என்னும் தொழிற்கல்வி மூலம் தங்களுடைய அடுத்தகட்ட வாழ்வினை வழி நடத்த ஏதுவாக உதவிய ராஜேஷ் கண்ணன் அவர்களுக்கு TRICHY VISION சார்பாக வாழ்த்துக்கள்.