கடந்த ஆண்டு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரந்தோறும் இணைய வழியில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் சிறப்பாக பங்காற்றிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாய் அழைத்து செல்ல பள்ளி கல்வி துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்போது ஒமிக்ரான் பரவல் காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அப்போது தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 11 ஆம் வகுப்பு சென்று விட்ட நிலையில், அவர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் அப்போது ஒத்திவைக்கப்பட்ட பயணத்தை நாளை (10.11.2022) மேற்கொள்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதுமிருந்து அரசு பள்ளியைச் சேர்ந்த 33 மாணவர்கள் மற்றும் 34 மாணவிகள் என மொத்தம் 67 பேர் நாளை திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் துபாய் மற்றும் சார்ஜாவிற்கு கல்வி சுற்றுலா செல்கின்றனர். இவர்களுக்கு உதவியாக 5 ஆசிரியர்களும் உடன் செல்கின்றனர். துபாய் நகரத்திற்கு கல்வி சுற்றுலா மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவை அவர்கள் காண உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் வந்த மாணவர்கள் அனைவரும் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
அவர்கள் அனைவரையும் வரவேற்ற பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறினார். மேலும் கல்வி சுற்றுலா செல்வது குறித்து அனைவரும் கட்டுரை எழுத வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளும் வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் குறிப்பேடுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாளை (10.11.2022) காலை அனைத்து மாணவ மாணவிகளும் துபாய் செல்ல உள்ளனர். அவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments