Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

இலக்கியத்தில் விருந்தோம்பல்

கவிச்சக்ரவர்த்தி கம்பன், ஆகச்சிறந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கம்பரின் புலமைக்கு எடுத்துக்காட்டாக நாம் சொல்லும் உவமை; கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவி பாடும் என்பதேயாகும். எண்ணற்ற பாடல்களை கம்பர் எழுதி இருந்தாலும் அவர் இயற்றிய இராமாயணம் மிகவும் புகழ்பெற்றது. நாம் இன்று எடுத்திருக்கும் கட்டுரை ராமாயணத்தில் இருந்தே எடுத்திருக்கிறோம்.

இராமாயணத்தில் பல அற்புதமான பாடல்கள் இருக்கிறது, கருத்துகள் இருக்கிறது. உதாரணமாக அனுமனை சொல்லின் செல்வர் என்ற நிலைக்கு உருவாக்கி இருப்பார் கம்பர். அந்த அளவுக்கு கம்பரின் கவிரசம், வார்த்தை விளையாட்டுக்கள் அற்புதமாக இருக்கும். 

ராமர் பட்ட துயரங்கள் ஏராளம், சீதா பிராட்டி பட்ட துயரமும் ஏராளம். அதில் மிகவும் முக்கியமான காலகட்டம் அவர்கள் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்று இருப்பார்கள். அங்கே காட்டிலும் மேட்டிலும் அவர்கள் துன்பமுற வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதை ஒரு தவநிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் அவர்களது வாழ்விற்கு இன்னும் துன்பம் சேர்ப்பதாக இருந்த நிகழ்வு ராவணன் சீதையை இலங்கைக்கு கொண்டு சென்றது. சீதை அசோகவனத்தில் தனித்திருந்து கவலையுடன் ராமனை எண்ணிக் கொண்டிருந்த பொழுது, அவர் எப்படியெல்லாம் புலம்பி இருக்கலாம்?

தன் நாயகர் வேறு எங்கேயோ இருக்கிறார், நான் இங்கு இப்படி இருக்கிறேன் என்று என் கணவருக்கு தெரியுமா? என்று புலம்பி இருக்கலாம், நான் கணவர், மைத்துனர் சொல்லை கேட்டிருக்கலாம் என நினைத்து புலம்பி இருக்கலாம், என் கணவர் எப்படி சாப்பிடுவாரோ என்று எண்ணி புலம்பி இருக்கலாம்.

ஆனால் இந்த இடத்தில் கம்பர் சீதா பிராட்டியின் புலம்பலை எப்படி எழுதி இருக்கிறார் தெரியுமா? விருந்து கண்டபோது என்னுறுமோ என விம்மும்’ என்று சீதா பிராட்டி புலம்பியதாக எழுதி இருக்கிறார். விருந்தினர் தங்கள் வனவாசக் குடிசைக்கு வரும்பொழுது ராமபிரான் எவ்வாறு தனித்திருந்து விருந்தோம்பல் செய்வார்? நான் இங்கு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளேனே, நான் இல்லாமல் என் ராம பிரான் எவ்வாறு விருந்து உபசரிப்பார்? என்று எண்ணி கவலையுற்று புலம்பி விம்மி இருக்கிறாள் சீதாபிராட்டி என்றுதான் கம்பர் எழுதியிருக்கிறார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் கம்பர் ராமாயணத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார். அன்று கணவனும் மனைவியும் சேர்ந்து எதைஆகச்சிறந்த இல்லற வாழ்வாக செய்திருக்கிறார்கள், அறமாக செய்திருக்கிறார்கள் என்பதை இவ்வரிகள் நமக்கு எடுத்துக்காட்டி பறை சாற்றுகின்றன.

வள்ளுவனும் சரி கம்பனும் சரி ஔவையும் சரி விவேக சிந்தாமணியும் சரி இன்னும் பல இலக்கியப் பாடல்களும், ஒவ்வொன்றும் நமக்கு எடுத்துச்சொல்வது இல்லறத்தின் முக்கியமான அறம் விருந்தோம்பல் என்பதுதான்.

இதை நினைவுபடுத்தி நம் இடத்திற்கு வரும் விருந்தினரை நன்முறையில் உபசரித்து, பொது இடங்களிலும் பண்புடன் நடந்து கொண்டு நம் கலாச்சாரத்தை உலகிற்குப்பறைசாற்றுவோம். 

தொகுப்பாளர் –

தமிழூர் கபிலன்   

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *