திருச்சி, தென்னூர், சங்கீதபுரத்தை சேர்ந்த புகார்தாரர் ராமலிங்கம் என்பவர் கடந்த 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி மற்றும் மகள் பெயர்களில், திருச்சி நவல்பட்டில் வீட்டு மனைகள் வாங்க மனு செய்துள்ளார்கள். ஒரு மனையின் விலை ரூ.5,234/- நிர்ணயம் செய்யப்பட்டு, அதன்படி மூன்று மனைகளுக்கு முன் வைப்பு தொகையாக தலா 1100/- செலுத்தியுள்ளார். பின்னர் ராமலிங்கத்திற்கு நவம்பர்-1995 ஆம் ஆண்டு தலா 32 சதுர மீட்டர் வீதம் முறையே வீட்டு மனை எண். 58, 65, 67 என மூன்று மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புகார்தாரர் ராமலிங்கம் நவம்பர்-2010 ஆம் ஆண்டு மேற்படி மனைகளுக்குரிய மீதத்தொகையை முழுவதும் செலுத்தியுள்ளார். இந்நிலையில் 07.01.2011 அன்று புகார்தாரர் ராமலிங்கம் தமிழ்நாடு வீட்டு வாரிய அலுவலகம் சென்று அவருடைய மனைக்குரிய பத்திரத்தை பெற்றுக்கொண்டு, அவரது மனைவி மற்றும் மகளுக்குரிய பத்திரங்களை தமிழ்நாடு வீட்டு வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் மாரிமுத்து என்பவரிடம் கேட்டபோது, அவர் புகார்தாரரிடம் இரண்டு மாதத்திற்கு பிறகு வரும்படி தெரிவித்துள்ளார். அதன்படி புகார்தாரர் ராமலிங்கம் கடந்த 24.03.2011 அன்று மதியம் 12 மணிக்கு தமிழ்நாடு வீட்டு வாரிய அலுவலகத்திற்கு சென்று உதவியாளர் மாரிமுத்துவை சந்தித்து அவருடைய மனைவி மற்றும் மகளுக்குரிய பத்திரங்களை கேட்டுள்ளார். அப்போது உதவியாளர், மாரிமுத்து புகார்தாரர் ராமலிங்கத்திடம் பத்திரங்களை விடுவிக்கவும், ஏற்கனவே புகார்தாரருக்கு கொடுத்த பத்திரத்திற்காகவும் ரூ.3,000/- கையூட்டு கேட்டுள்ளார். பின்னர் புகார்தாரர் கொடுக்க மறுக்கவே, பணி உதவியாளர் மாரிமுத்து ரூபாய் 500 குறைத்துக்கொண்டு ரூ.2,500/- கையூட்டாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத புகார்தாரர் ராமலிங்கம் கடந்த 24.03.2011 அன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் புகார் கொடுத்ததன்படி, மாரிமுத்து, பணி உதவியாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருச்சி என்பவர் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.10/2011-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன்தொடர்ச்சியாக கடந்த 25.03.2011 ஆம் தேதி ராசயனம் தடவப்பட்ட லஞ்சப்பணத்தை புகார்தாரரிடம் கொடுத்து, பொறிவைப்பு நடவடிக்கை
மேற்கொண்டதில், புகார்தாரர் ராமலிங்கத்திடம் பணி உதவியாளர் எதிரி மாரிமுத்து மீண்டும் கையூட்டாக ரூ.2,500/-ல் தனக்காக ரூ.1,500/-ம், மேற்படி அலுவலகத்தில் கிரைய பத்திரம் தயார் செய்ய உதவியாக இருந்த வாட்ச்மேன், பெர்னத் ஐசக் என்பவருக்கு தனக்கான ரூ.1,000/-மும் லஞ்சமாக இருவரும் புகார்தாரர் ராமலிங்கத்திடம் ராசயனம் தடவப்பட்ட லஞ்சப்பணத்தை கேட்டுப் பெற்றபோது, அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் இரா.அம்பிகாபதி அவர்களால் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் எதிரி-1 மாரிமுத்து, பணி உதவியாளர் கடந்த 10.04.2024 அன்று இறந்துவிட்டபடியால், அவர் மீதான குற்றம் கனம் நீதிமன்றத்தால் வழக்கறவு (Charge Abate) செய்யப்பட்டது. பின்னர் எதிரி-2 பெர்னத் ஐசக் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று விசாரணையின் முடிவில், எதிரி-2 பெர்னத் ஐசக், வாட்ச்மேன் என்பவர் மீதான குற்றம் அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு இன்று 25.10.2025 ஆம் தேதி திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு அவர்கள், எதிரி-2 பெர்னத் ஐசக் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.1,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேற்படி வழக்கினை கோ.மணிகண்டன், காவல் துணைக் கண்காணிப்பாளர், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அவர்கள் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்தது மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞராக கோபிகண்ணன் அவர்கள் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments