"மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்" - கண்ணீர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட திருச்சி காவலர்!

"மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்" - கண்ணீர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட திருச்சி காவலர்!

திருச்சி மாவட்ட காவல்துறையில் மோப்பநாய் பிரிவு பயிற்சியாளர் மற்றும் காப்பாளராக பணியாற்றிவந்தவர் அழகர். திருச்சி மத்திய சிறைச்சாலை எதிரில் உள்ள காவலர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.

இறப்பதற்கு முன் இவர் எழுதிய கடிதத்தில், தன்னுடைய தற்கொலைக்கு காவல்துறை அதிகாரிகளோ, குடும்பத்தினரோ நண்பர்களோ யாரும் காரணம் இல்லை என்றும், கடந்த சில நாட்களாகவே காரணம் தெரியாத மன அழுத்தத்தில் தான் இருந்து வந்ததாகவும், அந்த மன அழுத்தத்தின் காரணமாகவே நன்றாக யோசித்து சுயமாக இந்த முடிவை எடுத்ததாகவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

மேலும் தான் இறந்த பிறகு தன் இறப்பு குறித்து நண்பர்களிடமோ, அதிகாரிகளிடமும், உறவினர்களிடமோ புலன் விசாரணை நடத்த வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

https://youtu.be/hO6NVGIYrpo
Advertisement

அம்மா, அப்பா, சகோதரன் சகோதரி சகோதரியின் குழந்தைகளின் பெயர்களை எழுதி மிஸ் யூ என எழுதி, சகோதரியின் கணவர் தன்னுடைய குடும்பத்தின் மூத்த மகனாக இருந்து கவனித்துக் கொள்ளுமாறும் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தின் இறுதியில் நினைவூட்டல் என குறிப்பிட்டு தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி வைத்துவிட்டு தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் காவலர் அழகர்.

Advertisement

மன அழுத்தம் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வரும் நிலையில், மன அழுத்தத்தின் காரணமாக பல நாட்கள் யோசித்து தற்கொலை முடிவை சுயமாக எடுத்துள்ளதாக கூறியுள்ள காவலர்களின் செயல் வேதனையின் உச்ச மாகவே பார்க்கப்படுகிறது