Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்- துரை வைகோ

No image available

மதிமுக முதன்மைச் செயலாளர்  பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 

2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ அவர்கள் திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு திரும்பினேன். தலைவருக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர்,ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனால் எப்போதும் சுற்றுப் பயணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ அவர்கள் வழக்கம் போல செயல்பட முடியாத நிலை உருவானது. 

தலைவர் என்பதை தாண்டி என் தந்தை உடல் நலத்தை பாதுகாக்க அவரை கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்க முடிவு எடுத்து அவருக்கு கடமையாற்றி வந்தேன். சென்னையில் நடந்த மாநாட்டிலும் தலைவருடன் இருந்து கவனித்துக் கொண்டேன்.

இந்த சூழ்நிலையில் தான் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் தலைவர் உடல்நலமின்றி இருப்பதால் தங்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் என்னை கலந்து கொள்ள அன்போடு அழைத்தனர். 

அதைப்போல கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பங்களின் துக்க நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு ஆறுதல் கூறினேன். என் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்காக இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளை தாங்கிக் கொண்டு தங்கள் கைப் பொருளை செலவிட்டு கட்சிக்காக உழைத்து வரும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கட்சியை காப்பாற்றி வருகிறார்களே, அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பது என்னுடைய கடமை என்பதை உணர்ந்தேன். 

அப்படி செல்லுகிற தருணங்களில் அவர்களின் நிபந்தனையற்ற அன்பு என்னை நெகிழ்ச்சி அடையச் செய்தது.தலைவர் மீது வைத்துள்ள பாசத்தால் கட்சியினர் என் மீது காட்டுகிற நேசம் வளர்ந்தது. இந்த சூழ்நிலையில் தான் கொரோனா காலத்தில் மீண்டும் இயக்கத் தந்தை வைகோ அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஏழு எட்டு மாதங்களுக்கு மேலாக வெளியே போக முடியாத அளவுக்கு வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அதன் பிறகும் முன்பு போல பயணங்கள் மேற்கொள்ளவோ, கூட்டங்களில் வீர முழக்கம் செய்யவோ முடியாத நிலை தலைவருக்கு ஏற்பட்டது. 

இந்த சூழ்நிலையில் தான் ஊரக உள்ளாட்சி தேர்தல் வந்தது. எந்த குருவிகுளம் ஒன்றிய சேர்மனாக என் தந்தை வைகோ அவர்கள் பொறுப்பு வகித்தாரோ அதே குருவிகுளம் ஒன்றியக் குழுத் தலைவர் பொறுப்பில் மறுமலர்ச்சி திமுகவை சேர்ந்த ஒருவரை அமர வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அதைக் களத்தில் நிறைவேற்றிக் காட்டி தமிழ்நாட்டில் திமுகவை தவிர பிற கட்சிகள் ஒன்றியத் தலைவர் பதவியை ஒரு இடத்திலே கூட பிடிக்க முடியாத நிலைமையில் மதிமுக குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனைக் கைப்பற்றியது. மதிமுக ஒன்றியக் குழுத் தலைவர் பதவி ஏற்றதும் இயக்கத் தந்தை வைகோ அவர்களை அந்த அலுவலகத்தில் சேர்மன் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த போது நானும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களும் அடைந்த நெகிழ்ச்சிக்கு அளவு இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கழகத் தொண்டர்கள் நிர்வாகிகள் என்னை கட்சியில் ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து அழைத்த வண்ணம் இருந்தனர். கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முன்வந்த தலைவர் நிர்வாக குழு கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டார்.நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்ட 106 பேரில் 104 பேர் கழகத்தில் நான் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வாக்குகளை அளித்தனர். இப்படியாகத்தான் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராக, அதன் பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராக கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 

நான் ஒருபோதும் எந்த பொறுப்பையும் தலைமை பதவியையும் விரும்பியதில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற இந்த மாபெரும் இயக்கத்தில் நான் ஒரு முன்னணி தொண்டனாக இருந்து இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும், இயக்கத் தந்தை வைகோ அவர்களுக்கும் பணியாற்ற வேண்டும் , அது என் கடமை என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டேன். சட்டமன்றத் தேர்தல் வந்த போது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு இடங்களில் சாத்தூர் தொகுதியும் ஒன்றாகும். அத்தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று இயக்கத் தோழர்களும் சாத்தூர் தொகுதி மக்களும் , அதைவிட மேலாக கூட்டணி தலைமையும் விரும்பிய நிலையில் நான் போட்டியிடாமல் அந்த வாய்ப்பு கட்சியில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் ரகுராமனுக்கு கிடைக்கச் செய்தேன். 

அதன் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்ததும் எல்லா மாநகராட்சிகளிலும் கழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவும் பேரூராட்சி நகராட்சிகளில் கழகத்தினர் உறுப்பினர்களாக பதவிக்குச் செல்லவும் நான் என்னால் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொண்டேன். அதற்காக கூட்டணி தலைமையுடன் பல நேரங்களில் கோரிக்கை வைத்து அதனை நிறைவேற்றி இருக்கிறேன். தமிழகத்தில் நகராட்சி தலைவராக மாங்காடு முருகன் அவர்களின் மனைவி சுமதி முருகன் பொறுப்பு ஏற்கவும், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பொறுப்பை சூர்யகுமார் ஏற்கவும், பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் துணைத் தலைவர்களாக நமது இயக்கத் தோழர்கள் இடம் பெற செய்யவும் என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றோம் என்பதை கழக தோழர்கள் நன்கு அறிவார்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் மறுமலர்ச்சி திமுக நம்பிக்கை தரக்கூடிய வகையில் வெற்றி நடை போடத் தொடங்கியதும் இயக்கத்திற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள தொடங்கினேன்.இயக்கத் தோழர்களுக்கு தொண்டர்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் தலைவருக்கு துணையாகவும் செயல்பட்டு வரும் எனக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் ஊக்கமளித்தனர். நாடாளுமன்றத் தேர்தல் நிதி திரட்டும் பணிகளில் நமது கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு கனிசமான நிதியையும் திரட்டித் தந்து தலைவரை மகிழ்வித்தனர்.நாடாளுமன்றத் தேர்தல் குறித்து நிர்வாகக் குழுவில் கருத்துப் பரிமாற்றம் நடந்த போது கிடைக்கிற ஒரு சீட்டை கட்சியில் சீனியராக இருக்கிற சிறப்பாக செயல்படுகிற விசுவாசம் மிக்க ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தினேன்.

ஆனால் நூற்றுக்கு நூறு விழுக்காடு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நான்தான் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தினார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு புதிய சின்னமாகத் தீப்பட்டி சின்னத்தை தேர்வு செய்து 15 நாட்களில் மக்களிடையே எடுத்துச் சென்று திருச்சி தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆதரவோடு வியக்கத்தக்க வெற்றியை நாம் பெற்றோம். எனக்கு வாய்ப்பினை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெருமை சேர்க்கிற வகையில் தான் நாடாளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்துகிறேன். திருச்சி தொகுதியில் மக்கள் கழகத்திற்கு பேராதரவு தரும் வகையிலும் ,தொகுதி பிரச்சனைகளுக்கு வேண்டிய தீர்வு கிடைக்கும் வகையிலும் பணியாற்றுகிறேன்.ஒன்றிய அமைச்சர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு இயக்கத்தந்தையை அழைத்துக் கொண்டு நேரடியாக போய் சந்தித்து அவற்றை நிறைவேற்றுவதற்கு முனைந்து வருகிறேன். அதைப்போல மாநில அரசுக்கும் மக்கள் கோரிக்கைகளை நேரடியாக எடுத்துச் சென்று தீர்வு காணுவதற்கு பெரு முயற்சி மேற்கொள்கிறேன். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக மறுமலர்ச்சி திமுகவுக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்பதால் தளராத ஊக்கத்துடன் மக்கள் பணியை செய்து வருகிறேன். 

இயக்க தந்தையை நேசிப்பதை போல என்னையும் கழகத் தோழர்கள் பாராட்டி வருவது எனக்கு பொறுப்பை அதிகரிப்பதாக இருக்கிறதே என்ற கவலையுடன் தான் தினம்தோறும் என் பணிகளை மிகுந்த கவனத்தோடு செய்கிறேன்.தலைவர் உருவாக்கிய மறுமலர்ச்சி திமுக என்கிற இந்த திராவிட இயக்கம் தமிழ்நாட்டு அரசியலில் வலிவும் பொலிவும் பெற வேண்டும் என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் நினைப்பதை போல நானும் அதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *