திருமணமாகாத 19 வயது பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்த போலி பெண் மருத்துவர் கைது.

திருமணமாகாத 19 வயது பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்த போலி பெண் மருத்துவர் கைது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் 19 வயது பெண்ணிற்கு கருகலைப்பு செய்ததில், பெண் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவரது கர்ப்பபையினை மருத்துவர்கள் முற்றிலுமாக நீக்கியுள்ளனர். இது தொடர்பாக போலி பெண் மருத்துவரை ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ளது புதுக்காலணி. இப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீ என்ற ராஜலட்சுமி (45). இவர் 10 ம் வகுப்பு வரை படித்துள்ள நிலையில் ஒரு பெண் மருத்துவரிடம் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பெண் மருத்துவர் வெளிநாடு செல்ல ராஜலட்சுமி மண்ணச்சநல்லூர் கடைவீதி பகுதியில் உள்ள பழமையான வீட்டினை வாடகைக்கு எடுத்து அதில் கருகலைப்பு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மண்ணச்சநல்லூர் அருகே சித்தாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகாத 19 வயது பெண்ணிற்கு கடந்த 7 நாட்களுக்கு முன் கருகலைப்பு செய்துள்ளார். கருகலைப்பு செய்ததால் 19 வயது பெண்ணிற்கு உடல் உபாதையினால் தொடர் ரத்து போக்கு ஏற்படவும், சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பபை எடுத்தால் தான் பெண் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக கூறியதன் அடிப்படையில் பெண்ணிற்கு கர்ப்பை எடுத்து, தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

இது குறித்து திருச்சி மாவட்ட குடும்ப நல துணை இயக்குநர் டாக்டர் பிரியதர்ஷினி ஜீயபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கருகலைப்பு செய்த போலி பெண் மருத்துவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் கருக்கலைப்பு செய்வதற்கான மருத்துவ உபகரணங்களை திருச்சி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் லட்சுமி முன்னிலையில் கருகலைப்பு மையத்திலிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.