ஸ்ரீரங்கத்தில் தொடரும் அலறல் - வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி 17 பவுன் நகை கொள்ளை!!

ஸ்ரீரங்கத்தில் தொடரும் அலறல் - வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி 17 பவுன் நகை கொள்ளை!!

Advertisement

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்தவர் சிந்துஜா (வயது 27) இவரது மாமியார் சுகந்தி. சிந்துஜாவின் கணவர் சீனிவாசன் நேற்று  சென்னை சென்றிருந்த நிலையில், மாமியார் மற்றும் மகள் ஷானவியுடன் சிந்துஜா  உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 4 மணியளவில் அவரது வீட்டின் பின்புற கதவை உடைத்துக் கொண்டு, தலையில் குல்லா அணிந்தவாறு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள்  இருவர்  சிந்துஜா மற்றும் சுகந்தி  அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றபோது இருவரும் தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தங்கள் கையில் வைத்திருந்த  உருட்டுக்கட்டையால் தாக்கியதில் சிந்துஜாவின் மண்டை உடைந்தது. இதனால்  இருவரும் காயமடைந்த நிலையில், கொள்ளையர்கள் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரின் 17 பவுன்  தாலி சங்கிலியையும், 14,000 ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக உறவினர்களுக்கு சிந்துஜா தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த உறவினர்கள் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தொடர்புகொண்டு நடந்ததை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வந்த காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்துள்ளனர்.

Advertisement

ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மர்மநபர்கள் தாக்கி கொள்ளையடிக்கும் சம்பவம் என்பது தொடர்கதையாகி உள்ளது. ஸ்ரீரங்கத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக காவல் துறையிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.