"ஸ்டேரிங்கை பிடித்தவுடன் தான் மகிழ்ச்சியாக இருக்கிறது"!! நெகிழும் திருச்சி பேருந்து ஓட்டுனர்!!!
கொரோனா ஆரம்பமான காலத்தில் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தோம். சில நாட்கள் விடுமுறை என்பதால்! ஆனால் அதுவே தலைகீழாக மாறி இரண்டு மாதங்கள் வீட்டில் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கி விட்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு தற்போது ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தில் உள்ளோம். இந்நிலையில் நேற்றிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டது. "ஸ்டேரிங்கை பிடித்த உடன் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என நெகிழும் ஓட்டுநரின் சிறப்பு தொகுப்பை வெளியிடுகிறோம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கே.கே நகர் வரை செல்லும் நகர பேருந்து ஓட்டுனர் ரவிச்சந்திரன்! தமிழ்நாடு அரசு கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் வேலை செய்து வருபவர். இதுகுறித்து அவர் கூறுகையில்… 30 வருடமாக ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். இவ்வளவு நாள் நான் வீட்டில் இருந்ததே இல்லை! கொரோனா ஆரம்பமான காலத்தில் ஒரு வார விடுமுறை என மகிழ்ச்சி இருந்தது. ஆனால் அதுவே ஒரு காலகட்டத்தில் வெறுத்துப் போய்விட்டது! எப்படா வேலைக்கு செல்வோம் என்ற நிலை வந்துவிட்டது!! இன்று காலை என்னுடைய பேருந்தை எடுத்து ஸ்டேரிங்கைப் பிடித்த உடன் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஒருபுறம் கொரோனாவை நினைத்து பயமாக இருந்தாலும் மற்றொருபுறம் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்தை இயக்கினாலும் கூட போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் சரிபார்த்து வைக்கப்பட்டிருக்கிறது. பேருந்தை இயக்குவதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என நெகிழ்கிறார் ரவிச்சந்திரன்.
கொரோனா பலருடைய வாழ்க்கையை திருப்பி போட்டாலும் மீண்டும் அதே பணியை செய்யும்போது ஒரு இனம்புரியாத ஆனந்தத்தை பெறுவோம். அந்தவகையில் வேலையை அன்பு செய்து செய்யும் ஓட்டுனர் ரவிச்சந்திரனுக்கு திருச்சி விஷன் சார்பாக வாழ்த்துக்கள்!