கடைசி பந்து வரை அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் - போராடி தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 

கடைசி பந்து வரை அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் - போராடி தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 

ஐபிஎல் 2021 கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் நேற்று  மும்பையில் நடைபெற்றது.  இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் நிதானமாக விளையாடி தனது அணிக்கு 91 ரன்களை சேர்த்தார்.  அதிரடி ஆட்டக்காரரான கிரீஸ் கெயில் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் இவரது சிறப்பான ஆட்டத்தை ஓரத்திற்கு தள்ளிய ஹூடா 28 பந்துகளில் 6 சிக்ஸ்களை அடித்து 64 ரன்கள் எடுத்தார். 

ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள புதிய பந்து வீச்சாளரான சேட்டன் சகாரியா தனது சிறப்பான பந்துவீச்சால் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். 4 ஓவர்களுக்கு 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். 

மொத்தமாக 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து அபார இலக்கை பஞ்சாப் அணி நிர்ணயித்தது. 

222 ரன்கள் என்ற இலக்கொடு களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரங்களில் வெளியேற, பிறகு களமிறங்கிய அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் தொடரின் முதல் செஞ்சுரியை பதிவு செய்தார். சம்சனின் விக்கெட்டை இரண்டு முறை பஞ்சாப் அணி தவறவிட்டது. இதனாலேயே கடைசி ஓவர் வரை பஞ்சாப் அணி படபடப்பொடு காணப்பட்டது. தனது அணிக்கு தனி ஒருவனாக போராடிய சஞ்சு சாம்சன் இறுதி பந்தில் சிக்சர் அடிக்க முயன்றபோது அவுட் ஆனார். இதனால் கடைசி பந்தில் தனது வெற்றி வாய்ப்பை இழந்தது ராஜஸ்தான் அணி. 


முகமது ஷமி- யின் சிறப்பான 17வது ஓவரும், அர்ஷ்தீப் சிங் - ன் கடைசி ஓவரும் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. 

இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.