காதல் திருமணம் - இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தி அனுப்பிய கன்டோன்மென்ட் காவல்துறையினர்!!
திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரநாதன் (24), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இசக்கி அம்மாள் (23). காரைக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிதம்பரநாதன் பெற்றோர் இசக்கியம்மாள் வீட்டில் பேசியபொழுது, அவர்களது பெற்றோர் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இசக்கி அம்மாளுக்கு வேறு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு எடுத்ததால் அவர் திருச்சிக்கு வந்து சிதம்பரநாதனுடன் நேற்று திருமணம் செய்துகொண்டார்.
இது குறித்த தகவலை சிதம்பரநாதன் பெற்றோர், இசக்கியம்மாள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த பெற்றோர் தூத்துக்குடியிலிருந்து காரில் வந்துள்ளனர். அப்போது பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சரணடைய காதலர்கள் வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய பெண்ணின் பெற்றோர் காவல் நிலைய வாசலில் வைத்து பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி விட்டு தொடர்ந்து சிதம்பரநாதனையும் ஏற்ற முயற்சிக்கும் பொழுது காவல்துறை துணை ஆணையர் (டிசி) வேதரத்தினம் அவ்வழியாக சென்றுள்ளார்.
இச்சம்பவத்தை கவனித்த அவர் காரை நிறுத்தி இறங்கி வந்து, பெண்ணின் பெற்றோர் வந்த காரை தடுத்து நிறுத்தி, என்ன பிரச்சனை என விசாரித்ததுடன் பெண் காரில் அழுது கொண்டிருப்பதையும் கவனித்தார். தொடர்ந்து இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், பெற்றோர் தங்களை பிரிக்க நினைப்பதாகவும் கூறினர் காதலர்கள். இருவரையும் வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்ற பெற்றோரிடமும் விசாரணை நடத்திய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
உடனே பெண்ணின் பெற்றோர் சமாதானமாக செல்வதாகவும், தன் மகளையும் மகளின் கணவரையும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்ததையடுத்து, புகார் எதுவும் பதிவு செய்யாமல், இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.