திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் பாரத் கார்டனில் வசித்து வருபவர் காளிதாஸ். இவர் அரியமங்கலம் பகுதியில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு காளிதாஸ் பட்டறைக்கு சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த காளிதாசன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் காளிதாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான போலீசார் வேலூர் மாவட்டம் காட்பாடி சீதாராமன் பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் காளிதாசன் வீட்டில் நகைகளை திருடியது அவரது கூட்டாளி மூன்று பேருடன் சேர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 15 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் தலைமறைவாகியுள்ள மணிகண்டனின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK







Comments