எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பாலம் மறுகட்டுமானப் பணிகளுக்குத் தேவையான இரும்பு (Steel) கொள்முதல் மற்றும் வழங்கல் தொடர்பான தற்போதைய நிலவரம் குறித்து தகவல் அறிக்கை வழங்கிட கோரி, நேற்று (14.12.2025) திருச்சியில் அமைந்துள்ள, SAIL கிளை விற்பனை அலுவலக மேலாளருக்கு விரிவானதொரு கடிதம் எழுதியுள்ளேன்.
அதில், திருச்சி கோட்டை இரயில் நிலையம் அருகில், இரயில்வே கி.மீ. 137/000 இல் அமைந்துள்ள தற்போதைய சாலை மேம்பாலம் (மேரிஸ் மேம்பாலம்) எண் E.17இன் மறுகட்டுமானப் பணிகள் தொடர்பாக தங்களது கவனத்திற்கு இவ்விண்ணப்பத்தை முன்வைக்கிறேன்.
திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இம்மேம்பாலத்தின் மறுகட்டுமானப் பணிகளாலும், அதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்களாலும் கடந்த ஓராண்டுக்கு மேலாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது தாங்கள் நன்கறிந்ததே.
இந்தப் பணிகளை செயல்படுத்தும் துறைகளுடன் நான் தொடர்ச்சியான மேற்கொண்டுவரும் தொடர்புகளின் மூலம், இத்திட்டத்திற்குத் தேவையான இரும்பு (Steel) கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக SAIL நிர்வாகம் தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அறிந்துள்ளேன். இருப்பினும், இத்திட்டத்தின் முன்னேற்றம் உரிய காலத்தில் தேவையான இரும்பு (Steel) வழங்கலுடன் நேரடி தொடர்புடையதாக இருப்பதால், அதில் ஏற்படும் எந்தவொரு சிறு தாமதம் கூட தினசரி பயணம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கடுமையாகப் பாதிக்கும் நிலையில் உள்ளது.
குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், வணிகப்பெருமக்கள் மற்றும் இந்த சாலையை பயன்படுத்தும் அனைவருமே, தற்போது நீண்ட மற்றும் காலதாமதமாகும் மாற்றுப் பாதைகளை பயன்படுத்தத் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மறுகட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரரால் பணிநிறைவேற்றத்தில் குறிப்பிடக்கூடிய அளவு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இச்சூழலில், இந்த மேரிஸ் மேம்பால கட்டுமானப் பணிகளை நெருக்கமாக கண்காணித்து அதன் முன்னேற்றத்தை உறுதி செய்வது மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் இந்த சாலை மேம்பால மறுகட்டுமானத் திட்டம் மேலும் பின்னடைவைச் சந்திப்பதைத் தவிர்க்க முடியும்.
இச்சாலை மேம்பாலத்தின் முக்கியத்துவத்தையும், மறுகட்டுமானப் பணிகளுக்காக பாலம் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொடர் இடர்ப்பாடுகளையும் கருத்தில் கொண்டு, இத்திட்டத்திற்குத் தேவையான இரும்பு (Steel) கொள்முதல் மற்றும் வழங்கல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதைக் குறிக்கும் விரிவான தகவல் அறிக்கையை தாங்கள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், இரும்பு (Steel) வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடு குறித்த தகவலையும் அதில் இணைத்து வழங்கினால், மேம்பால கட்டுமானப் பணிகளை விரைவாக நிறைவு செய்ய தேவைப்படும் ஒத்துழைப்பை ஒருங்கிணைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
பொது நலன் கருதி, இந்த முக்கியமான சாலை மேம்பால கட்டுமானத் திட்டம் விரைவில் முடிவடைவதற்கு, முக்கிய பொதுத்துறை நிறுவனமான SAIL, தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கும் என நம்புகிறேன்.
என்று எனது கடிதத்தில் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து நிறைவுசெய்தேன்.
என் கோரிக்கையின் படி அவர்களின் முழு ஒத்துழைப்பை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன். அது எனது திருச்சி மக்களின் போக்குவரத்தில் ஏற்பட்டிருக்கும் இடையூறுகளை நீக்கி, கோட்டை இரயில் நிலையம் அருகில் மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணியை விரைந்து முடித்திட பேருதவியாய் அமையும்.
அப்பணிகள் முழுவதையும் முடித்து மக்கள் பயணத்தை தொடங்கும் அந்த நாள் வரை இதுதொடர்பான என் இடையறாத பணி தொய்வின்றி தொடரும் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments