Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மருந்துகள் நோயை குணபடுத்தும் நோயாளிகளை மருத்துவர்களால் மட்டுமே குணப்படுத்த முடியும் – தேசிய மருத்துவர்கள் தினம்

மருத்துவம் என்பது நம் எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய மற்றும் பாராட்டத்தக்க ஒரு துறை ஆகும். அதிலும் இப்பொழுதுள்ள இந்த கொரோனா காலத்தில் மருத்துவர்களின் முக்கியத்துவத்தை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். தம் உயிரை துச்சமென நினைத்து பல மோசமான நோய் பாதித்த நோயாளிகளை கணிவுடனும், அக்கறையுடன் கவனிப்பதில் மருத்துவர்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை.

மருந்துகள் வேண்டுமானால் நோயை குணப்படுத்தலாம். ஆனால் நோயாளியை மருத்துவராலே மட்டுமே குணப்படுத்த முடியும். அவர்களின் சிறப்புகளை அறிந்ததால் தான் சிறு குழந்தைகள் கூட பிற்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்துகின்றனர். இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் இந்த நொடியில் கூட, சாவின் விளிம்பில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான நபர்களை, இந்த உலகிலுள்ள மருத்துவர்கள் காப்பற்றி கொண்டிருப்பார்கள்.

இந்தியாவின் மருத்துவ மேதை டாக்டர் பி.சி ராயின் சேவையை போற்றும் விதத்தில் அவர் பிறந்த ஜூலை 1ஆம் நாள் தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. உயிரை காக்கும் உன்னதமான பணியை மேற்கொள்ளும் மருத்துவர்கள் தெய்வத்திற்கு சமமாக மதிக்கப்பட வேண்டியவர்கள். பாதிப்புக்குள்ளாகும் மக்களை  காப்பதற்காக தன்னலம் இன்றி செயல்படும் அவர்களின் சேவையை அனைவரும் போற்ற வேண்டும். சிறப்பு தினத்தில் மருத்துவர்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்று மருத்துவர்களில்
கருத்துக்கள் இதோ..

மருத்துவர். வாணிபிரியா – SRM மருத்துவமனை.

மருத்துவர்களை நீங்கள் கடவுளாக நினைத்து போற்றிட வேண்டாம். மனிதர்களாக நினைத்தாலே போதுமானது. எங்களால் இந்த தினத்தைக் கூட மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை. கண்முன் அத்தனை மக்கள் இறந்து கொண்டிருக்கும் பொழுது எங்களால் அவர்களை  காப்பாற்றுவதற்கு முடியாமல் போகின்றது என்ற மன அழுத்தம் தான் ஒவ்வொரு மருத்துவருக்கும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றுதான் நம் வீட்டில் ஒருவர் இறக்கும் பொழுது நம் மனநிலை எப்படி இருக்குமோ என்று எங்களால் பொது மக்களின் மனநிலையில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.

அதேசமயம் பொதுமக்களும் எங்களின் மனநிலையிலிருந்து பார்ப்பார்கள் எனில் மருத்துவர்களுடைய நிலை அவர்களுக்கு புரியக்கூடும். எல்லாத் தடைகளையும் தாண்டி மருத்துவத்துறை எப்பொழுதுமே சவாலான ஒன்று அந்த சவாலை கடந்து பணி செய்வதற்குகாரணம் மக்கள் முகத்தில் நாங்கள் பார்க்கும் புன்னகையே.
இன்றைய கொரானா காலகட்டத்தில் மருத்துவர்களுக்கும் அரசிற்கும் மக்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய ஒன்று மக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அரசு கூறும் அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுதலே ஆகும். கடுமையான காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களுடைய கடமைகளை சரியாக செய்தால் மட்டுமே இந்த பெருந்தொற்றை நம்மால் வெல்ல முடியும் என்கிறார். 

மருத்துவர். மதன்வர்மா – அரசு ஸ்டான்லி மருத்துவமனை.

ஒவ்வொரு நாளுமே மருத்துவர்களுக்கு சவாலான நாட்கள் தான் அதிலும், இந்த காலகட்டம் என்பது மிகப்பெரும் சவாலை மருத்துவர்களின் முன் வைத்துள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றி மருத்துவர்களால் மட்டுமே இந்த பேரிடர்களில் இருந்து கடந்துவிட முடியாது. மக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். இத்தனை மக்கள் இறந்து கொண்டிருக்கும் சூழலில் கூட கொரோனா என்பதெல்லாம் பொய் கட்டுக்கதை என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். இது பலரின் நம்பிக்கையையும் சிதைக்கும் வகையில் இருக்கிறது. விழிப்புணர்வாக இருப்பவர்களுக்கும் உள்ளுணர்வில் சந்தேகத்தை எழுப்பிவிடுகிறது. 130 கோடி மக்கள்தொகை இருக்கும் ஒரு பெரும் நாட்டில் அனைவருக்குமான புரிதலை கொண்டு வருதல் என்பது சற்று கடினமான செயல்தான். ஆனால் இதனை நாம் அனைவருக்கும் புரிய வைக்கும் தருணத்தில் தான் நாம் பெருந்தொற்று வெற்றி கொள்வோம்.

தடுப்பூசி போட்டுக் கொள்வது அரசு கூறிய அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளில் பின்பற்றுதல் தனிமனித ஒழுக்கம் மட்டுமே இன்றைக்கு நம்மை  காப்பதற்கான மிகப்பெரும் வழி. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே அரசு பல தளர்வுகளை அறிவிக்கின்றது. அந்த நேரத்தில் மக்கள்  பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றினால் மட்டுமே நம்மை மூன்றாம் அலையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இயலும். மக்களுக்கான சேவையில் முன்கள பணியாளர்களாக எங்களுடைய பணி எப்பொழுதுமே தொடர்ந்து கொண்டே இருக்கும். மருத்துவத்துறை என்பது மருத்துவர்கள் மட்டுமே சார்ந்தது கிடையாது என்ற புரிதல் பொதுமக்களுக்கு வரும் பொழுது மருத்துவர்கள் மீதான தாக்குதல் குறையும் என்றார்.

மருத்துவர்கள் தங்களின் உடல்நிலை ஓய்வு ஆகிய அனைத்தையும் துறந்து இரவு பகல் பார்க்காமல் உயிர்களை காக்க போராடி வருகின்றனர் நோயாளிகளிடம் இருந்து பரவும் தொற்று நோய் பாதிக்கப்பட்டு பல மருத்துவர்கள் தங்களை உயிரை இழந்துள்ளனர். மருத்துவ சேவை புரிவதையே லட்சியமாகக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்திலும் இலவசமாகவும் பல மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர் போக்குவரத்து வசதிகள் இல்லாத கிராமங்களில் கூட படகு மூலம் ஆற்றை கடந்து சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர். உலகை அச்சுறுத்தும் கொள்ளை நோய்கள் தாக்கும் போதெல்லாம் களத்தில் முதன்மையாக நின்று மக்களை  காக்கப் போராடும் மருத்துவர்கள் நிஜவாழ்வின் “சூப்பர் ஹீரோக்கள்”.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *