திருச்சி மாநகர இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தவிர்க்க புதிய திட்டம் - திருச்சி மாநகர காவல் ஆணையர் துவக்கி வைப்பு!!

Oct 2, 2020 - 13:30
 163
திருச்சி மாநகர இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தவிர்க்க புதிய திட்டம் - திருச்சி மாநகர காவல் ஆணையர் துவக்கி வைப்பு!!

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாநகரில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகுவதை தவிர்க்கும் பொருட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் "இளைஞர் ஒளிர்க் கவினுலகு" என்னும் புதிய திட்டம் இன்று திருச்சி தில்லை நகர் சாஸ்திரி ரோட்டில் திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாநகர காவல் ஆணையர்
ஜெ.லோகநாதன் தலைமை தாங்கி இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் வகையிலும், திட்டத்தை விளக்கி கூறி துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் படி அந்தந்த காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டும், இளைஞர்களின் வாழ்க்கையினை நல்வழி படுத்தும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கு தயார் படுத்துதல், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தல், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை, அவர்களுக்கு உரிய உதவிகள் செய்து கொடுத்தல், இளைஞர்களுக்கு தீய பழக்கங்கள் ஏற்படுத்தும் அடிப்படை காரணங்களை கண்டறிந்து அவற்றிலிருந்து விலகி இருப்பதற்கு உரிய வழிவகைகள் இந்த திட்டத்தின் மூலம் செய்து தரப்படும்.

இத்திட்டத்தின் நோக்கம் இளைஞர்களுக்கு ஒளிமயமான, அழகான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதாகும். மேலும், இளைஞர்கள் தங்களது சக நண்பர்கள் தீய பழக்கங்களை தவிர்க்கும் பொருட்டு தாமாக முன்வந்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும், சட்ட விரோதமான செயல்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை பற்றிய தகவல்களை திருச்சி மாநகர பிரத்யேக வாட்ஸ்அப் 96262-73399 என்ற எண்ணில் தெரிவிப்பதன் மூலம், திருச்சி மாநகரின் எந்த ஒரு இளைஞரும் போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுக்க முடியும். தகவல் தெரிவிப்பவரின் இரகசியம் காக்கப்படும் உண்மையான தகவலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் திருச்சி மாநகரின் ஒவ்வொரு காவல் நிலைய அளவில் விரிவுபடுத்தப்படும். என்றார் காவல் ஆணையர் லோகநாதன்.

Advertisement

மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு அ.பவன் குமார் ரெட்டி, காவல் துணை ஆணையர் இரா. வேதரத்தினம், உதவி ஆணையர் நுண்ணறிவு பிரிவு, உதவி ஆணையர் ஸ்ரீரங்கம் சரகம், காவல் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீரங்கம், தில்லை நகர், உறையூர் மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுமார் 60 இளைஞர்கள் கலந்து கொண்டார்கள்.