1966 ஆம் ஆண்டு திருச்சி நகராட்சியாக இருந்த பொழுது மத்திய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது மத்திய பேருந்து நிலையம்.
தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்த வண்ணம் இருந்தது. வாகனப்பெருக்கம் மக்கள் தொகை பெருக்கத்தால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. 2002 ஆம் ஆண்டு 5.6 கோடி நிதி ஒதுக்கீட்டில் பாதுகாப்புத் துறையிடமிருந்து நிலம் பெற்று மத்திய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
விரிவாக்கம் செய்த பொழுதும் மத்திய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்பட்டது. சாலைகளில் நிறைய பேருந்துகள் நிற்பதன் மூலமும் வார இறுதியில் பேருந்துகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் போக்குவரத்து நெரிசலுக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கும் உள்ளாகினர்.
தற்காலிக பேருந்து நிலையம் அமைத்தும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இதற்கு எப்பொழுது ஒரு விடிவு வரும் என்று மக்கள் காத்திருந்தனர். மக்களின் பல வருட கோரிக்கைக்கு இன்று முடிவு கிடைத்தது போல் மத்திய பேருந்து நிலையம் பஞ்சப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது
பேருந்து நிலையம் மாற்றப்பட்ட பொழுதிலும் ஒரே நாளில் மத்திய பேருந்து நிலையம் மிகவும் வெறுச்சோடி காணப்படுகிறது.இதில் மிகவும் பாதிப்படைபவர்கள் அங்கிருக்கும் சிறு வியாபாரிகள்,இரவு நேர உணவு கடைகள், ஆட்டோ ஓட்டுநர்கள் இதுபோல் மத்திய பேருந்து நிலையத்தை நம்பி தொழில் செய்து வந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாது மிகவும் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் உள்ளதாக மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். இங்கு எந்த பேருந்தும் வராது யாரும் நிக்காதீங்க என்ற குரல் மத்திய பேருந்து நிலையத்தில் கேட்ட வண்ணம் உள்ளன மேலும் மத்திய பேருந்து நிலையத்திற்கு இரண்டு மூன்று தனியார் பேருந்துகள் இன்று வந்த நிலையில் போலீசாரால் அந்தப் பேருந்துகள் திருப்பி விடப்பட்டன
Comments