Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை தனியார் மையமாக்குவதற்கு எதிர்ப்பு. அதனை திரும்பப் பெற வலியுறுத்தி கோரிக்கை 

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை தனியார் மையமாக்குவதற்கு எதிர்ப்பு. அதனை திரும்பப் பெற வலியுறுத்தி கோரிக்கை.  – துரை வைகோ அறிக்கை

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பது இந்திய பொதுத்துறை நிறுவனங்களாகும். அப்படிப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை வளர்ச்சி என்ற பெயரில் தொடர்ந்து தனியார் மையம் ஆக்கத்திற்கு உட்படுத்தி வரும் ஒன்றிய அரசு இப்போது, பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான விமான போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் அரசு நடத்தும் விமான நிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய விமான போக்குவரத்து துறையின் முடிவிற்கு நான் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். 

குறிப்பாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்ற எனது நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள திருச்சி விமான நிலையத்தை முற்றிலும் தனியார் மயமாக்குவதை கண்டித்து நான் என் எதிர்ப்பை பதிவு செய்கிறேன். திருச்சி விமான நிலையம் திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேலையில், அதனை தனியாருக்கு கை மாற்ற வேண்டிய தேவை என்ன என்பது குறித்து ஒன்றிய விமான போக்குவரத்து துறை விளக்கம் அளிக்க வேண்டும். தனியார்மயமானால்தான் வெளிநாட்டு விமான நிறுவனங்களோடு எளிதாக ஒப்பந்தம் போட முடியும் என்ற மாயத் தோற்றத்தை தனியாருடன் சேர்ந்து அரசே உருவாக்க முயல்வதாக நான் குற்றம் சாட்டுகிறேன். 

திருச்சி விமான நிலையம் தனியார் மயமானால் தமிழ்நாட்டில் உள்ள இதர விமான நிலையங்களின் வளர்ச்சி முடக்கப்படும் அபாயத்தை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். வளர்ச்சி என்பது அனைத்து பகுதிக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமே தவிர ஒரு பகுதிக்கு மட்டுமானதாக அது இருந்திடல் கூடாது. திருச்சி விமான நிலையம் தனியார் மயமானால் கட்டண கொள்ளைக்கு அது வழி வகுக்கும். சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களின் விமான கட்டணத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டண விலை ஏற்றப்பட்டு அந்தச் சுமை நேரடியாக பயனாளர்களின் தலையில் விடியும் என்பதை நான் உறுதியாக எடுத்துரைக்க விரும்புகிறேன். அதுமட்டுமல்லாமல் விமான நிலைய பணியில் இடஒதுக்கீடு முற்றிலும் நீக்கம் செய்யப்படும் அபாயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சமூக நீதியின்பால் பற்றுறுதி கொண்ட தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் இது போன்ற நடவடிக்கைகளை முற்றிலும் தவிர்ப்பது அவசியமானது.

இந்தியாவில் டெல்லி மும்பை பெங்களூரு ஹைதராபாத் திருவனந்தபுரம் மங்களூர் அஹமதாபாத் ஜெய்ப்பூர் லக்னோ கௌகாத்தி ஆகிய பத்து விமான நிலையங்கள் தனியார்மயமான பிறகு, அதிலிருந்து அரசு ஈட்டிய வருமானம் எவ்வளவு என்றும், அந்த விமான நிலையங்களின் வரவு செலவு கணக்கை தாங்கள் ஆய்வு செய்தீர்களா என்பதையும் ஒன்றிய அரசிடம் நான் கேட்க விரும்புகிறேன். பெங்களூரு விமான நிலையம் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலை விளைவிக்க கூடியது என்று அரசுக்கு நான் கவனப்படுத்த விரும்புகிறேன்.

பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையம் தனியார் மயமாக்கப்பட்ட பின், குறிப்பாக சென்னை விமான நிலையத்தின் தரம், சேவை, அதனுடைய தரநிலை பின்னுக்குத் தள்ளப்பட்டதை ஒப்பிட்டு நாம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தியா வியட்நாம் வான்வழி போக்குவரத்து ஒப்பந்தம் வரலாற்றிலேயே முதன்முறையாக சென்னை கல்கத்தா ஆகிய விமான நிலையங்களை நீக்கிவிட்டு பெங்களூர் ஹைதராபாத் தனியார் விமான நிலையங்களை சேர்த்து ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது, இதை தனியார் மயமாதலின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக நான் கருதுகிறேன். 

இப்படி வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடுவதில் தனியார் நிறுவனத்தினரின் கை ஓங்கி இருப்பது பொதுத்துறை நிறுவனத்திற்கு உகந்தது அல்ல என்பதையும் நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஆகவே திருச்சி விமான நிலையத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவை மறுபரிசீலனை செய்து, அதனை கைவிடுமாறு ஒன்றிய விமான போக்குவரத்து துறையையும், ஒன்றிய அரசையும் நான் கேட்டுக்கொள்கிறேன். என்று துரை வைகோ  கூறியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *