திருச்சி மாவட்ட இரண்டு அமைச்சர்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
2021 சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவினர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே. என். நேரு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும்
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வி வளர்ச்சி துறை அமைச்சராகவும் இன்றைக்கு பதவியேற்றுள்ளனர். திருச்சி மாநகரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த இரு அமைச்சர்களும் திருச்சி மாவட்டத்தை முன்னேற்றுவதற்கான வகையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற மக்களின் கருத்தை திருச்சி விஷன் குழு கேட்டறிந்த போது அவர்கள் அளித்த பதில்கள் பின்வருமாறு.
விக்னேஷ்
வழக்கறிஞர்:
திருச்சியை பொறுத்தவரை வளர்ந்து வரும் நகரங்களில் மிக முக்கியமான நகரமாக ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் அதிகமாக செயல்படுத்தப்படுகிறது.
திருச்சி மாநகரை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் ஏனெனில் இங்கு சுற்றுலா துறை, தொழில் துறை சார்ந்த வளர்ச்சி பணிகளை முன்னெடுப்பதற்கு மிகவும் சிறந்த இடமாக கருதப்படுவதற்கு திருச்சி தமிழ்நாட்டின் மையப்பகுதி ஆக இருப்பதும் இன்னும் ஒரு சிறப்பான ஒன்று. மக்கள் வைக்கும் கோரிக்கைகளில் மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுவது ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது தான். கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் பள்ளிக்கல்வி தேர்ச்சி விழுக்காட்டை மாவட்ட வாரியாக கடைசி நான்கு மாவட்டங்களில் தான் திருச்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது எனவே கல்வித்துறையில் இதை முன்னேற்ற வேண்டுமெனில் சரியான கல்வி முறையை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துரைப்பது, திருச்சி மாநகர் முழுவதும் நூலகங்களை அதிகரிக்கச் செய்தல் வேண்டும் மாவட்ட நூலகம், தாலுகா,வார்டு போன்ற இடங்களில் நூலகங்கள் அமைத்துதர வேண்டும் மாணவர்களிடையே வாசிப்பு திறனை அதிகரிப்பது மிக முக்கியமான ஒன்றாக கருத வேண்டும்.
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ துறையில் இட ஒதுக்கீடு வழங்கியது போல அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு அல்லது அவர்களுடைய கல்வித் திறனை ஊக்கப்படுத்தும் விதமாக ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அரசு பள்ளிகள் மீது நம்பிக்கையும் அதிகரிக்கக்கூடும்.
கோயமுத்தூர், மதுரை போன்ற நகரங்களில் உள்ளது போல திருச்சி மாநகரில் உள்ள நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் சாம்ப்ர்ஸ் அமைத்து தருதல் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்என்கிறார் விக்னேஷ் .
பிரசன்னா
டிஜிட்டல் மீடியா டெவலப்பர்.
தொழில் நகரங்களில் மிக முக்கியமான நகரங்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக திருச்சி இருந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் திருச்சியில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் அதிக வேலைவாய்ப்பின்மை உருவாகிக் கொண்டிருக்கிறது. எனவே அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய முதல் விருப்பம். அதேசமயம் பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரைக்கும் திருச்சி மாவட்டம் பின்தங்கிய மாவட்டங்களில் தான் இருந்துகொண்டே இருக்கிறது .எனவே அதற்கான சில வழிமுறைகளை பின்பற்றினால் திருச்சியை கல்வியில் சிறந்த மாவட்டமாகவும் முன்னெடுத்துச் செல்வதற்காக அவர்கள் செயல் படுவார்கள் என்றும் நம்புகிறோம் என்கிறார்.
பெலிஷியா
கல்லூரி பேராசிரியர்
திருச்சியை பொறுத்தவரை கல்வி நிறுவனங்களுக்கு பஞ்சமில்லாமல் அதிக கல்வி நிறுவனங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக மாவட்ட கல்வித்துறை போன்ற துறைகளில் பணியாற்றுபவர்கள் சரியான முறையில் செய்யப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
நல்ல விஷயங்கள் இருந்தாலும் சுகாதாரத்தை பொறுத்தவரை குறிப்பாக திருச்சி மாநகராட்சி பொறுத்தவரை அவர்கள் சரியான முறையில் செயல்படுகிறார்களா என்றால் கேள்விக்குறிதான் .
எங்கும் குப்பை குப்பை மேடுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு நிலை தான் இருந்துகொண்டிருக்கிறது. தற்போது அமைச்சராக பதவி ஏற்ற வகையில் நேரு அவர்கள் நகர்புற வளர்ச்சி துறைகளில் அதிகமாக கவனம் செலுத்தினால் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். அதே சமயம் போக்குவரத்தைப் பொறுத்தவரை அதிக சாலைகள் அமைத்தல் சாலைகள் சீரமைத்தல் குறிப்பாக மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை ஏற்படுத்தல் போன்றவற்றையும் இவர்கள் செய்தாலே திருச்சி மாநகர் வளர்ச்சி பெறும் .கருணாநிதி ஆட்சி புரிந்த காலத்தில் கல்வி துறைக்கு அவர் அளித்த முக்கியத்துவம் கடந்த பத்தாண்டுகளில் கிடைக்கவில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.அடுத்த 5 ஆண்டுகளில் நல்ல பல திட்டங்களை முன்னெடுத்து சிறந்த மாவட்டமாக திருச்சி முன்னேறும் என்பதில் நம்பிக்கை கொள்கிறோம்.
பாண்டியன்
கல்லூரி பேராசிரியர்.
இப்பொழுது இந்த இருவருக்கு மட்டுமின்றி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் முதல் தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் தலையாய கடமையாக இருப்பது
இந்த பேரிடர் காலத்தை எதிர்கொள்வதுதான் அவர்கள் இதை சரியான முறையில் நல்வழிப்படுத்தி விட்டாலே தமிழகம் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான வழிவகுக்கும் . அனைவருமே தங்களுடைய பொறுப்பை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் குறிப்பாக இவர்கள் இருவரும் இலாகா பணிகளை பின்தள்ளி முதலில் மக்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாக கருதுகிறேன் .
திருச்சியினை பொறுத்தவரை பல முன்னேற்ற திட்டங்கள் அப்படியே கடந்த 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் கடந்த பத்தாண்டுகளில் திருச்சியை பொறுத்தவரை எவ்வித புது முயற்சிகள் புதுவிதமான திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. மக்கள் இவை அனைத்தையும் செய்வதற்காக ஒட்டுமொத்தமாக அதிமுகவை நிராகரித்து 9 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவை திருச்சி மாவட்டத்தில் வெற்றி பெற செய்துள்ளனர். திருச்சி மாநகராட்சி 25 ஆண்டுகால வெள்ளிவிழா கொண்டாடிய பின்பும் சிறந்த மாநகராட்சிக்கான எந்தவித செயல்பாடுகளிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த வில்லை எவ்வித நடவடிக்கைகளையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. வரிகளை உயர்த்துவதை தவிர திருச்சி மாநகராட்சி எவ்வித முன்னேற்றம செயல்களிலும் அவர்கள் ஈடுபடுவதாக தெரிவதில்லை.
இனியேனும் வரும் தமிழக அரசு இவர்களுக்கான ஒருமுறையான திட்டங்களை செயல்படுத்துவதற்கான மாநகராட்சி பொறுப்புக்களில் இருப்பவர்களை கண்காணித்தல் என்பது மிக மிக அவசியமான ஒன்றாக செய்தல் அவசியமாகிறது. இந்தியாவில் 11வது சர்வதேச விமான நிலையமாக இருக்கும் பெரிய விமான நிலையத்திற்கு திருச்சியில் இருக்கும் எந்த பகுதியில் இருந்து பேருந்து வசதிகள் சரிவர இல்லை. சாதாரணமாக திருச்சி தெற்கிலிருந்து இருந்து திருச்சி மேற்கு செல்வதற்கு ஒருவர் மூன்று பேருந்துகளில் பயணம் செய்யவேண்டி இருக்கிறது. கள்ளிக்குடி சுமார் 77 கோடி அளவிற்கு பொருட்செலவில் கட்டப்பட்ட மார்க்கெட் மக்கள் பயன்பாடு இன்றி அப்படியே கிடப்பில் கிடக்கிறது. இது தொழில் முனைவோர்களுக்கு அல்லது மக்களின் பயன்பாட்டிற்கு பயன்படும் விதமாக செயல்படுத்துவதற்கான அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.வேலை வாய்ப்புகளை அதிகரித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மேலும் இன்றைக்கு திருச்சியை பொறுத்தவரை ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார்கள். சாதாரண மக்களுக்கு சென்று சேர வேண்டிய பொதுவான தேவைகளை பூர்த்தி செய்வது மிக முக்கியமான ஒன்று .இவை அனைத்தையும் திருச்சி மாவட்டத்தின் சார்பாக தமிழகத்தின்
அமைச்சராக பொறுப்பேற்றுள்ள இவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.உய்யக்கொண்டான் கால்வாய் போன்றவற்றில் தூய்மைப்படுத்துவது இன்னும் டெல்டா பகுதியில் தொழில் சார்ந்த வளர்ச்சியை முன்னெடுத்துச் தொழில் நகரமான திருச்சியை இன்னும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் இவர்கள் ஈடுபட வேண்டும் என்பதே மக்களுடைய முதன்மையான கோரிக்கையாகவும் இருக்கின்றது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon