ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் கூட்டம்
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நாளை மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்திருந்த நிலையில், இன்று அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக மக்கள் அதிக அளவில் கூடியுள்ளனர்.
கொரோனா பொது முடக்க காலத்தில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அம்மா மண்டபம் மூடப்பட்டு, நான்காம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் திறக்கப்பட்டது. தொடர்ந்து மக்கள் அதிக அளவில் வந்த வண்ணமே இருந்தனர். இந்நிலையில் நாளை மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் நாளை தர்ப்பணம் கொடுப்பதற்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், இன்று தர்ப்பணம் கொடுப்பதற்காக அம்மா மண்டபத்தில் மக்கள் அதிக அளவில் கூடியுள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது . எனினும் மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் முக கவசம் அணியாமல் உள்ளனர்.