திருச்சி பெல் தொழிற்சாலை வளாகத்தை பசுமைமயமாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் இயக்கம் தொடங்கப்பட்டது. பெல் வளாகத்தில் உள்ள உயரழுத்த கொதிகலன் ஆலையின் இரண்டாம் பிரிவு அருகே 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் ஒரே நாளில் நடப்பட்டன.
சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பொதுமேலாளர் இ.திருமாவளவன் முன்னிலையில் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை ஆலையின் கூடுதல் பொதுமேலாளர் என். துரைராஜ் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் கூறுகையில், மத்திய அரசின் பசுமை இயக்கத்தில் இணைந்துள்ள பெல் நிறுவனமானது தனது வளாகம் முழுவதையும் பசுமையாக மாற்றும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் இயக்கம் தீவிரப்படுத்தப்படுகிறது.
இந்திய சுதந்திர அமுதப்பெருவிழாவை முன்னிட்டு பெல் ஆலையின் பல்வேறு பிரிவுகளில் 75,000- க்கும் கூடுதலான மரக்கன்று நட முடிவு செய்து, 20,000க்கும் மேற்பட்ட மரக்கன்று நடும் பொறுப்பை திருச்சி வளாகம் ஏற்றுள்ளது. இதற்கான வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், ஏற்கனவே 17,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மரம் நடும் இயக்கமானது ஷைன் திருச்சியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
பெல் முன்னாள் படை வீரர் சங்க உறுப்பினர்கள், சிவில் துறையினர் மற்றும் பல்வேறு துறையின் ஊழியர்கள் என 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பல்வேறு நாட்டு ரக மரக்கன்றுகளை நட்டனர். பெல் வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பசுமையான சுற்றுப்புறங்கள் மற்றும் தூய்மையான தயாரிப்புகள் தொடர்பாக அதன் பசுமை சான்றுகளை நிலை நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் மூலம், பெல் வளாகப் பள்ளியும் பல்லுயிர்ப் பாதுகாப்பில் முன்னணியில் உள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களில் மழைநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை தோட்டங்களுக்கு பயன்படுத்துவது கூடுதல் சிறப்பாகும் என்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அனுஜ் டைல்ஸ் உரிமையாளர் தனகரன் கலந்து கொண்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments