திருச்சி பஜாஜ் பைனான்ஸ் கம்பெனி முன்பு இன்று 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முற்றுகை போராட்டம்!

திருச்சி பஜாஜ் பைனான்ஸ் கம்பெனி முன்பு இன்று 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முற்றுகை போராட்டம்!

திருச்சி தில்லை நகர் பகுதியில் இயங்கி வரும் பஜாஜ் பைனான்ஸ் கம்பெனி முன்பு இன்று 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொழில்கள் முடங்கி உள்ள நிலையில் தாங்கள் வாங்கியுள்ள கடனுக்கு தவணையை செலுத்த பைனான்ஸ் கம்பெனி தங்களை தொடர்ந்து நிர்பந்தித்து வருவதாகவும், பணத் தொகையை செலுத்தாதவர்களுக்கு செக் பவுன்ஸ் என்று சொல்லி, ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து முறைக்கு மேல் ஒரு முறைக்கு 500 வீதம் 5000 வரை அபராதம் விதித்துள்ளதாகவும் கூறி பைனான்ஸ் கம்பெனி வாசல் முன் கதறுகின்றனர் மக்கள்.

தள்ளாடி தடுமாறி நிற்கும் இந்த வயதான மூதாட்டி தன்னுடைய கடைசி தவணையாக 2400 ரூபாயை கட்டாததால், அபராதம் உள்ளிட்டவை விதித்து தற்போது 4500 ரூபாய் வரை பணம் செலுத்த சொல்வதாகவும், அதனால் தன்னுடைய பித்தளை பாத்திரத்தை அடகு வைத்து தற்போது பணம் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.வாங்கிய 7,500 ரூபாய் கடனில் ஒரு மாத தவணை ஆயிரம் ரூபாய் கொடுக்காததால் செக் பவுன்ஸ் என்று சொல்லி 5 முறைக்கு மேல் 590 ரூபாய் அபராதம் விதித்து 5000 வரை பணம் கட்ட சொல்வதாக தெரிவிக்கின்றார் இந்த இளைஞர்.

மத்திய அரசு… வங்கித் துறை நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் மக்களிடம் தவணை வசூல் செய்வதை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருந்தும், பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் தங்களிடம் கடன் பெற்ற மக்களை தவணைத் தொகையை செலுத்த சொல்லி அழுத்தம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல்,ஆட்களைக் கொண்டு மிரட்டுவதாகவும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு தரக்குறைவான வார்த்தைகளை சொல்லி மிரட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள்.

இதுகுறித்து பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது நாங்கள் யாரையும் அப்படி துன்புறுத்தவில்லை என்றும், இதுபோன்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,செக் பவுன்ஸ் ஆனால் ஒருமுறை மட்டுமே தங்கள் அபராதம் விதிப்பதாகவும்,மற்ற அபராதங்கள் வாடிக்கையாளர் சார்ந்த வங்கியின் மூலம் பிடித்தம் செய்யப்படுவதே என்றும்,இது குறித்து வாடிக்கையாளர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சிறு,குறு நிறுவனங்கள், நடுத்தர மக்கள் தான் இதுபோன்ற பைனான்ஸ் நிறுவனத்தில் கடனுதவி பெறுகின்றனர். ஊரடங்கு காலத்தில் உணவிற்கே வழியின்றி தவிக்கும் இம்மக்களுக்கு அரசு என்னதான் வழி காட்டினாலும், இதுபோன்ற தனியார் நிறுவனங்கள் தரும் மன அழுத்தம் மக்களை மேலும் துன்பத்திற்கு உட்படுத்துகிறது.இதுபோன்ற நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பு.