Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

மண்ணின் அடையாளமாக மாறிப்போன மணப்பாறை முறுக்கு!

முறுக்கு என்றதும் அனைவருடைய நினைவுக்கும் சட்டென வருவது மணப்பாறை தான். அந்தளவிற்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை முறுக்கு மிகவும் புகழ் வாய்ந்தது. தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா எனப் பல்வேறு வெளிநாடுகளுக்கும் மணப்பாறை முறுக்கு செல்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் ரயில் பயணங்களில் பெரும்பாலான ரயில்கள் மணப்பாறையில் நின்று தண்ணீர் பிடித்து நகரும். அப்படியொரு ரயில் பயணத்தில், திருநெல்வேலியில் இருந்து வந்த கிருஷ்ண ஐயர் அந்த வாய்ப்பை பயன்படுத்தி, மணப்பாறை ரயில் நிலையத்தில் முறுக்கு சுட்டு விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

இப்படி மணப்பாறை முறுக்கு பிரபலமாக காரணகர்த்தாவாக திகழ்கிறார் மணி ஐயர். இன்றும் மணி ஐயரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரது இந்தத் தொழிலை செய்து வருகின்றனர். அத்துடன், அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தத் தொழிலை செய்துவரும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மணப்பாறையில் இன்றைக்கும் உள்ளன.

சுவைக்கும், மணத்திற்கும் பெயர் பெற்றது மணப்பாறை முறுக்கு. சீரகம், ஓமம், எள் ஆகியவற்றுடன் அரிசி மாவைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் மணப்பாறை முறுக்கின் வாசமே நம்மைச் சாப்பிடத் தூண்டும். மொறுமொறுவென இதமாக நாவில் கரையும் பதமும், சுண்டியிழுக்கும் சுவையும்தான் மணப்பாறை முறுக்கின் சிறப்பு. கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைத் தொழிலாகத் தயாரித்து வரும் மணப்பாறை முறுக்குக்குத் தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

குழந்தைகளில் ஆரம்பித்து, பெரியவர்கள் வரை அனைவராலும் இன்றளவும் கொண்டாடப்படும் முறுக்கை அதனின் சொர்க்க பூமியான மணப்பாறையிலேயே சுடச் சுட சாப்பிட்டால் எப்படி இருக்கும்? முறுக்கின் இந்த ருசிக்குக் காரணமாக அவர்கள் கூறுவது, தண்ணீரைத்தான். அந்த ஊரின் தண்ணீர் அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. எந்த ஊரிலும் நீரின் சுவையைப் பொறுத்து உணவு வகைகளின் சுவை மாறுகிறது என்பது உண்மை. இதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக உள்ளது மணப்பாறை. இந்த ஊரில் தண்ணீர் இயல்பாகவே லேசான உப்புச் சுவையுடன் இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் முறுக்குக்கும் தனிச்சுவை கிட்டுகிறது

எல்லா கடைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், வீடுகளில் ஈசியாக செய்யக்கூடியதுமான திண்பண்டமாக முறுக்கு திகழ்கிறது. உலகெங்கிலும் உணவு பண்டத்திற்கான தனி அடையாளத்தை உருவாக்கிய மணப்பாறை முறுக்குக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு புவிசார் குறியீடு வழங்கியது. இன்றைக்கு எத்தனையோ உணவு வகைகள் வந்தாலும் நொறுக்கு தீனி என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வரும் முறுக்கு திருச்சி மண்ணின் தனி  அடையாளமே !

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *