திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தெரனிபாளையம் கிராமத்தில் சிலர் வீட்டில் ஏராளமான மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிறுகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார் கிராமத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த வரதராஜன் மகன் 41 வயதான ரங்கநாதன் மற்றும் ரங்கராஜன் மகன் 28 வயதான மணிகண்டன் ஆகியோர் வீடுகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் பதுக்கி வைக்கப்பட்ட 1,81,200 ரூபாய் மதிப்புள்ள 1412 மதுபாட்டில்களை சிறுகனூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் வேல்முருகன் உட்பட 3 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்த தப்பி ஓடி விட்டனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தேர்தலை முன்னிட்டு நேற்று முதல் 3 நாட்களுக்கு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை வாங்கி குவித்து வைத்திருந்த்து தெரியவந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் ரங்கநாதன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 1,81,200 மதிப்புள்ள 1412 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய வேல்முருகன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments