திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட முக்கியப் பணிகளுக்காக, மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்களை இன்று (10.11.2025) மாலை அரியலூரில் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
தனி போக்குவரத்துக் கோட்டம் கோரிக்கை

திருச்சி மாநகரம் தற்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) கும்பகோணம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெரிய மாநகரமாக திருச்சி இருந்தும், தனி கோட்டமின்றி இருப்பது குறித்து அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
திருச்சியின் கல்வி மற்றும் வணிக வளர்ச்சிக்கு அத்தியாவசியமான, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட தனி போக்குவரத்துக் கழக கோட்டத்தை கும்பகோணம் கோட்டத்திலிருந்து உடனடியாகப் பிரித்து அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நிலுவை தொழிலாளர்களுக்கு ஆதரவு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15,106 தொழிலாளர்களில் 5,493 பேருக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்ற விவகாரம் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.
மதிமுக தொழிற்சங்கத்தின் தீர்மானம்,தலைவர் திரு. வைகோ அவர்களின் கடிதம்,
சட்டமன்றத்தில் மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கை,
முன்னர் அமைச்சர் அளித்த உறுதிமொழி
ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, நிலுவையில் உள்ள 5,493 கேங்மேன் பணியாளர்களுக்கு உடனடியாக பணி உறுதி ஆணை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பிற முக்கியக் கோரிக்கைகள்
போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பல்வேறு நியாயமான கோரிக்கைகள் பட்டியலிட்டு அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் வட்டம், கடலையூரில் துணை மின் நிலையம் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்காக, ஊராட்சி மன்றத் தலைவி திருமதி திராவிடச்செல்வியின் கணவர் திரு. மாரியப்பசாமி அவர்கள், சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்க முன்வந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் தாலுகாவில் உள்ள அயன் ராசாபட்டி மற்றும் கைலாசபுரம் கிராமங்களுக்குக் கூடுதல் தூரப் பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பெரும் உதவியாக அமையும் என எடுத்துரைக்கப்பட்டது.

கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டறிந்த மாண்புமிகு அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள், அனைத்துக் கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இச்சந்திப்பின்போது, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் ஆவடி அந்திரிதாஸ் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட மின்வாரிய கேங் மேன்கள் உடனிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments