ஸ்ரீரங்கம் ரங்நாதர் கோயிலில் பங்குனி தேர்த்திருவிழா மார்ச் 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மார்ச்16-ம் தேதி நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள், 17-ம் தேதி குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளினார். இத்திருவிழாவின் 9-ம் திருநாளான நேற்று நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப் பல்லக்கில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக தாயார் சந்நிதியை சென்றடைந்தார்.
அங்கிருந்து பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டு பங்குனி உத்திரமண்டபத்தை வந்தடைந்தார். இதேபோல, உற்சவர் ரங்கநாச்சியார் தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு மாலை 3 மணி முதல்இரவு 10.30 மணி வரை நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. பின்னர் சின்னபெருமாள் தீர்த்தவாரி கண்டருளி இரவு 10.30 மணிக்கு தாயார் சந்நிதியை சென்றடைந்தார். தொடர்ந்து நள்ளிரவு 12 மணி முதல் இன்று அதிகாலை 3.30 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் தாயார் புறப்பட்டு, அதிகாலை 5.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
வருடத்தில் பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீதாயார் ஸ்ரீரெங்கநாதர் சேர்ந்திருப்பர். அன்றையதினம் இருவரையும் ஒருசேர வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், வேண்டுவன கிடைக்கும், திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் இன்று காலை 8 மணியளவில் நடைபெறவுள்ளது. நாளை (மார்ச் 20) இரவு ஆளும் பல்லக்கு வீதியுலாவுடன் பங்குனித் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments