மாற்றுத்திறனாளிகள் ஆவின் நிறுவனத்தின் விற்பனை மையம் அமைக்க நிதி உதவி - ஆட்சியர் தகவல்!
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
தகுதியான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த கை,கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், செவித்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் பார்வையற்றோர்கள் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு ஆவின் நிறுவனத்தின் மூலம் ஆவின் முகவர்களாக தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய்.50,000/- மானியமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்படுத்தும் பொருட்டு சுயதொழில் செய்திடும் வகையில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு ஆவின் நிறுவனத்திற்கு செலுத்த முன்வைப்பு நிதியாக ரூபாய்.25.000/- மற்றும் ஆவின் பொருட்களை கொள்முதல் செய்வதற்கான நிதியாக ரூபாய்.25,000/- என மொத்தம் ஒரு பயனாளிக்கு ரூபாய்.50,000/- மானியம் வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில் ஆவின் உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்து கடை வைத்து வியாபாரம் செய்வதற்கு மாற்றுத்திறனாளிகள் இவ்வலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன் பெற பயனாளிகள் ஆவின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திட வாடகை இடமாகவோ அல்லது சொந்த இடமாகவோ இருக்கலாம்.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், குடும்ப அட்டை நகல், மார்பளவு புகைப்படம்-1 வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் கார்டு ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்ற பின்புறம், கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி-1 என்ற முகவரியில் நேரில் 30.09.2020 தேதிக்குள் வந்து விண்ணப்பித்து பயனடையுமாறு, மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 0431- 2412590-யை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.