திருச்சி அரசுப்பள்ளி சார்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்காக 6 வீதிகளில் "வீதி நூலகம்"!!
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இந்த கொரோனா காலகட்டத்திலும் அசத்தி வரும், அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் சொந்த செலவிலேயே பள்ளி வளாகத்தை புதுப்பித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஒரு நன்மதிப்பைப் பெற்று இந்த வருடம் சேர்க்கை விகிதமானது கடந்த வருடத்தைவிட இரட்டிப்பாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பிராட்டியூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு வராத சூழ்நிலையில் அப்பள்ளி அமைந்துள்ள 6 தெருவில் வீதி நூலகங்களை அமைத்து வழி காட்டி வருகின்றனர் இப்பள்ளியைச் சேர்ந்தவர்கள்.அதனைத் தொடர்ந்து பள்ளியில் மாணவர்களுக்கு இணையவழி மூலம் பாடம் கற்பிக்கும் புதிய முறையினையும் நேற்று தொடங்கி வைத்தனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் சேர்க்கை இரட்டிப்பானதற்கான விழாவும் நேற்று நடத்தினர். மொத்தத்தில் திருச்சி அரசு பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக மாணவர்களின் எதிர்காலத்தை நோக்கி அடுத்த கட்டமாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிகழ்வில் மணப்பாறை மாவட்டக் கல்வி அலுவலர் ஜெகநாதன், ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வர் சிவக்குமார், ஹால்மார்க் பிஸ்னஸ் ஸ்கூல் இயக்குநர் ரமேஷ்குமார், நகைச்சுவை மன்ற செயலர் சிவகுரு நாதன், யுகா அமைப்பு அல்லிராணி, ஷைன் திருச்சி மனோஜ் தர்மர், அரிமா சங்கம் கருமண்டபம் நிர்வாகிகள், ரோட்டரி சங்கம் ஜெம் புகேஸ்வரம் எழில் ஆகியோர் கலந்து கொண்டு நூலகங்களை திறந்து வைத்து கல்வி தீபம் ஏற்றி வைத்தனர்.
மணிகண்டம் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் பள்ளி இணையதளத்தை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷாதேவி, உதவி ஆசிரியர் ரமேஷ்குமார் ஆசிரியர் வெண்ணிலா, கலாராணி, ezone செயலியின் முலம் மணிகண்டம் ஒன்றிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேரலையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். ஆசிரியர்கள் புவனேஸ்வரி, பாலா, சாந்தி, ரோஜா ரமணி, ஆகியோர் ஒவ்வொரு நூலகத்திற்கு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.