செல்போன் வாங்கி தராததால் தூக்கு போட்ட மாணவி - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
திருச்சி பீமநகரை சேர்ந்தவர் கேசவன்.இவர் தனியார் ஹார்டுவேர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் வைஷ்ணவி(14) தற்போது மேலப்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்காத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்திருக்கிறது. இதனால் இவர் தன் தந்தையின் செல்போனை ஆன்லைன் வகுப்பு உள்ளிட்ட பலவற்றிற்கு உபயோகித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு ஒரு சொந்தமாக செல்போன் வாங்கி தருமாறு நீண்ட நாட்களாக தன் தந்தையிடம் கேட்டு வந்துள்ளார்.
ஆனால் பணம் இல்லாத காரணத்தால் அவர் தந்தை செல்போனை வாங்கி தராமல் இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 18ம் தேதி வைஷ்ணவி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்ற வந்த வைஷ்ணவியின் உடல்நிலை மோசமடையவே 22ம் தேதி திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வைஷ்ணவி உயிரிழந்தார்.அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாலக்கரை போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.