அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும், குடும்பம் செழிக்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

இதன் காரணமாக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.
இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை தேரோட்டம், பூச்சொரிதல் விழா, தைப்பூச திருவிழா ஆகியவை மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, காலையில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மாரியம்மன் படம் வரையப்பட்ட துணியாலான கொடியை தங்க கொடிமரத்தில் கோவில் குருக்கள் காலை 7.40 மணிக்கு ஏற்றினர்.

அதைத்தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கோவில் இணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, இரவில் அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கிலும், இரவில் பூத வாகனம், மரஅன்ன வாகனம், மர ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மேலும் ஜனவரி 31ம் தேதி தெப்ப திருவிழாவும், பிப். 1ம் தேதி திருக்கோயிலிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பாடும், தொடர்ந்து இரவு வடதிருக்காவேரி கரையில் அரங்கநாதரிடமிருந்து சீர்பெறும் நிகழ்வும், பிப். 2ம் தேதி மஹா அபிஷேகத்துடன் வழி நடை உபயங்களை கண்டருளிகிறார்.

இந்நிகழ்வில் திருக்கோயில் விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் இளங்கோவன் இணை ஆணையர் சூரிய நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments