"திருச்சி மக்களுக்கு ரொம்ப நன்றி"!! நெகிழும் ஈழத்தமிழர் குடியிருப்புகள்!! - சிறப்பு கட்டுரை!!!
கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் பலர் வேலையில்லாமல் சொல்லொணாத் துயரில் ஆழ்ந்து வந்துகொண்டிருக்கின்றன.வேலையில்லாமல் அன்றாட உணவுக்குக் கூட வழியில்லாமல் சில குடும்பங்கள் இன்னும் தவித்து தான் வருகின்றன. இந்நிலையில் கொரனா தாக்கத்தால் அன்றாட பொருட்களுக்கு தவித்த இலங்கைத் தமிழர்கள் பற்றிய தொகுப்பு தான் இது!!
பொதுவாக உதவி என்றால் திருச்சி மக்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்நேரத்தில் பதிவு செய்கிறோம்.கஜா புயலின் தாக்கத்தால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட போது கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி பல உதவிகளை செய்தவர்கள் நம் திருச்சி மக்கள். அதற்காக நிவாரணப் பொருட்கள் அனுப்பிய வண்டி முழுவதும் இளநீர் அனுப்பி வைத்து அன்பை வெளிப்படுத்திய தருணம் தமிழகத்தையே நெகிழ வைத்தது.
கஜா புயலை தொடர்ந்து தங்களுக்கு இப்போதும் உதவி வேண்டும் என்ற உடனேயே திருச்சி Shine Treechy அமைப்பின் மூலம் திருச்சியின் நல்லெண்ணம் படைத்த ஹீரோக்களின் உதவியால் இன்று 260 இலங்கை தமிழர் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளனர்.இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் நமது திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மலைக்கோட்டை மக்களின் மலைபோல் உள்ள உள்ளங்களின் உதவியால் 24 மணி நேரத்தில் நிவாரண பொருட்களை திரட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி இலங்கை தமிழர்கள் முகாமில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவி வேண்டும் என கேட்டுக் கொண்டதின் பேரில் சுமார் 500 குடும்பங்களின் 3000 பேருக்கு அரிசி, ரவா உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஹலோ எஃப்எம் டைரி சகா, சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் சையது உமர் முக்தார் அவர்கள் கூறுகையில் "நாங்கள் சென்னையில் உதவிகள் செய்து வருகிறோம். திருச்சியிலும் நண்பர்களின் உதவியால் இந்த நிவாரணப் பொருள்களை வழங்கினோம்.வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையிலும் ஒரு பையன் தன்னால் முடிந்த 100 ரூபாயிலிருந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள் வரை அனைவரிடமிருந்தும் உதவிகள் வந்தது. அதனை பயன்படுத்தி நிவாரணப் பொருள்களை 500 குடும்பங்களுக்கு வழங்கினோம். உதவி வேண்டும் என கேட்ட 24 மணி நேரத்திலேயே பலர் உதவி செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் இதுபோல் உதவி தேவைப்படுபவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்ய காத்திருக்கிறோம்". என்றார்.
மற்றொரு புறம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா அழியாநிலை இலங்கை தமிழர்கள் முகாமிற்கு தான் கொரோனா நிவாரண பொருட்கள் திருச்சி சுப்பையா நடுநிலைப்பள்ளியில் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது! இதில் சுமார் 260 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து இலங்கை தமிழர்கள் முகாமின் தலைவர் மோகன்ராம் கூறும்போது "கஜா புயலினால் பாதிக்கப்பட்ட போது எங்களுக்கு மிகவும் உதவி புரிந்தனர்.இந்த தருணத்தில் கொரோனா தாக்கத்தால் வேலையில்லாமல் அனைவரும் வீட்டிலேயேதான் உள்ளோம். எங்கும் வேலைக்கும் செல்ல முடியவில்லை. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் திண்டாடி வந்தோம். பின்னர் கஜா புயலின் பாதிக்கப்பட்டபோது தங்களுடைய தொலைபேசி எண்ணை எடுத்து இப்போது தொடர்பு கொண்டு எங்களுக்கு உதவி வேண்டும் என்ற உடனேயே 260 குடும்பங்களுக்கும் தனித்தனியாக நிவாரண பொருட்களை வழங்கிய திருச்சி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்". என்றார்.
இச்சமுதாயத்தில் ஒருவர் துயரில் உள்ளபோது அவர்களுக்கு உதவி புரிந்து ஒட்டுமொத்த திருச்சி மக்களுக்குமே பெருமை சேர்த்த நல் நெஞ்சங்களுக்கு இந்நேரத்தில் நன்றியை பறைசாற்றுகின்றனர்.