4 பேரை பலியாக்கிய குண்டும் குழியுமான சாலை -சரி செய்யாத அதிகாரிகள் -போராட்ட களத்தில் இறங்கிய பொதுமக்கள்!!
திருச்சி மாவட்டம் திருவானைக்காவலிருந்து கல்லணை வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் இருப்பதால் அதிகளவில் விபத்து ஏற்படுவதால், சாலையினை சரி செய்ய வலியுறுத்தி உத்தமர்சீலி கிராம மக்கள் 50 திற்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி திருவானைக்காவலிருந்து உத்தமர்சீலி வழியாக கல்லணை அணைக்கட்டு , திருக்காட்டுப்பள்ளி, சுவாமிமலை, கும்பகோணம் செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது கல்லணையிலிருந்து திருவானைக்காவல் வரை உள்ள சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 7 இடங்களில் சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் விரிவாக்கம் பணிகள் நடந்து முடிந்த போது, பாலப் பணிகளும் நடந்து முடிந்தது.
தற்போது இந்த பாலம் பணிகள் முடிவடைந்த சாலையின் நடுவே பெரும்பள்ளங்கள் ஏற்பட்டது. இந்த பள்ளங்களில் கடந்த 18 நாட்களில் 14 விபத்துகளும், இதில் 4 பேர் உயிரிழந்தார். சாலையினை விரிவாக சரிசெய்ய வேண்டும். சாலையின் நடுவே உள்ள பள்ளங்களில் விபத்து ஏற்படாத வகையில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும். சாலையோரங்களில் உள்ள பள்ளங்களில் கிராவல் மண் கொட்டி நிரப்பாமல், சாலையோர களிமண் கொட்டுவதனை தவிர்க்க வேண்டும் உள்ளிட்டவைகளை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ரவிக்குமாரிடம் நேரில் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லாததால் உத்தமர்சீலி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் கொள்ளிடம் போலீஸார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் சாலைகள் சரி செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸார் உறுதி கூறியதால் சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் தற்காலிகமாக கைவிட்டனர்.