Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தாயுமானவனாக சிவனார் பிரசவம் பார்த்த விழா!-நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இன்று சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கிய சித்திரை தேர் திருவிழா ஐந்தாம் நாள் உற்சவத்தில் தாயுமானவர் செட்டி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் ஐதீக நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. பூம்புகார் பெருவணிகரான ரத்தினகுப்தன் மகள் ரத்தினாவதி திருச்சி மலைக்கோட்டை தெற்குவீதியில் இருந்த தனகுப்தன் என்பவருக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டு, சிலமாதங்கள் கழித்து மட்டுவார்குழலம்மையின் ஆசீர்வாதத்தினால் ரத்தினாவதி கருவுற்றார். ரத்தினாவதிக்கு பிரசவம் பார்க்க, அவரது தாயார் பூம்புகாரில் இருந்து திருச்சிக்கு வந்தபோது காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றைக்கடக்க தவித்திருந்தார்.

‘தாய் வருவார்’ என்று காத்திருந்த ரத்தினாவதி, செவ்வந்திநாதரை இடைவிடாது துதித்ததால் பிரார்த்தனையின் பலனாக இறைவனே தாயாராக அவதரித்து, முறையாக பிரசவம்பார்த்து, ஆண் குழந்தையை வெளியே எடுத்து கவனித்து வந்தார். காவிரி வெள்ளம் வடிந்து வீடு வந்த ரத்தினாவதியின் தாயார் நடந்ததைக் கேட்டறிந்ததோடு, இறைவன், இறைவியுடன் அனைவரிடத்திலும் காட்சியளித்தார். அன்றுமுதல் இத்தலத்தின் இறைவன் தாயுமானவர் என்றழைக்கப்படுகிறார்.

ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவின் 5ம் நாள் ‘செட்டிப்பெண் மருத்துவ’ வைபவம் நடக்கும். அதன்படி இன்று காலை கோவிலில், ‘செட்டிப்பெண் மருத்துவ’ வைபவம் சிறப்பாக நடந்தது. செட்டிப்பெண் கருத்தரித்து இருத்தல், வெள்ளத்தால் தாயின் வரவு தடைபடுதல், பார்வதி, கங்கையுடன் ஈசன் தாயாக வருதல், மகப்பேறு பார்த்தல், ரத்தினாவதி, ரத்தினாவதியின் தாயாருக்கு இறைவன், இறைவி காட்சியளித்தல் போன்றவை தத்ரூமாக அரங்கேற்றப்பட்டன.

குழந்தைபேறு மற்றும் சுகப்பிரசவம் நடக்க வேண்டுபவர்கள், ஸ்வாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், வாழைத்தார் வழங்கியும் வழிப்பட்டனர். அறநிலையத்துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்ப்பட்டிருந்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *