மதுரையில் பாகனை கொன்ற யானை... திருச்சி முகாமிற்கு வந்தது!!
மதுரையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெய்வானை என்கின்ற 13 வயது பெண் யானை வளர்க்கப்பட்டு வந்தது. இதனை குளிப்பாட்டுவதற்கு கடந்த மாதம் 6ம் தேதி அதன் துணை பாகன்கள் ராஜேஷ், காளிதாஸ் ஆகியோர் அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென கோபமடைந்த தெய்வானை யானை தனது தும்பிக்கையால் காளிதாசன் தூக்கி அருகில் இருந்த சுவரில் அடித்தது. இதில் படுகாயமடைந்த காளிதாஸ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து யானையை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
இந்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி தெய்வானை யானை நேற்று திருப்பரங்குன்றத்தில் இருந்து லாரி மூலம் திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள எம்.ஆர் பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இங்கு மாவட்ட வன அலுவலர் சுஜாதா முன்னிலையில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை, மருத்துவ குழுவினர் அந்த யானையை பரிசோதித்தனர். அதனைத் தொடர்ந்து மறுவாழ்வு மையத்தில் தெய்வானை யானை சேர்த்துக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் இங்கு பராமரிக்கப்படும் யானைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.