நூற்றுக்கணக்கான இந்தியர்கள் போர்முனையில் சிக்கியுள்ளனர் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, இன்றைய முற்பகல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது நூறு அல்ல, ஆயிரக்கணக்கானவர்களாக இருக்குமோ என்ற வலுவான ஐயம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்த கிஷோர் சரவணன் உட்பட 100-க்கு மேற்பட்ட இந்தியர்களையும் மீட்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தேன். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரை இரு முறை, அனைவரின் கவனத்தை ஈர்க்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து ஒரு முறை, வெளியுறவுத்துறைச் செயலாளரை இரு முறை, முக்கியமாக பிரதமரையும் இதுகுறித்து சந்தித்துப் பேசி, ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரையும் மீட்க எனது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
எனது இந்த முயற்சிகளை ஊடகம் மற்றும் பத்திரிகை வாயிலாக அறிந்து கொண்ட 14 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு குழுவினர் என்னை இன்று (09.08.2025) காலை 10 மணிக்கு புதுடெல்லியில் உள்ள எனது அலுவலகத்தில் சந்தித்தனர்.
அதன் தலைவர் ஜக்தீப் சிங், விரேந்திர குமார், சர்ப்ஜித் சிங் ஆகியோர் சுமார் மூன்று மணி நேரம் என்னோடு உரையாடினர். அடுக்கடுக்கான ஆதாரங்களை வழங்கினர். இதில் சர்ப்ஜித் சிங் என்பவர் ஐந்து மாதங்கள் ரஷ்ய-உக்ரைன் போரில் ஏமாற்றப்பட்டு ஈடுபடுத்தப்பட்டவர் என்பதால் உயிர் சாட்சியாக நம் முன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் இது மிகப் பெரிய பிரச்சினை என்பதையும் தாண்டி, ரஷ்யா-இந்தியா இரு நாடுகளின் வெளியுறவில் ஏற்பட்டுள்ள கருப்புப் பகுதிகளாக நான் கருதுகிறேன்.
இந்த சர்ப்ஜித் சிங், கூரியர் நிறுவனத்திற்காக பொருள் ஏற்றி இறக்கும் பணிக்கு மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ரஷ்யாவில் வேலை என்று ஒரு பெண்மணி அழைத்துச் சென்றுள்ளார். அவருடன் 18 நபர்கள் சென்றுள்ளனர். அவர்களை ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திற்கு அழைத்துச் சென்று நான்கு நாட்கள் உணவு கொடுத்து, தங்குமிடம் வழங்கி, ஊர் சுற்றிக் காண்பித்து, அதன் பிறகு அவர்கள் அனைவரையும் Rostow என்ற நகருக்கு அழைத்திச்சென்று, இரத்தப் பரிசோதனை மற்றும் உடல் தகுதி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இது பற்றி அவர்கள் ஏன் என்று கேட்டபோது, கூரியர் நிறுவனத்தின் நடைமுறைதான் என்று சொல்லியுள்ளனர். அதன் பிறகு ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை இந்தியர் ஒருவரைக் கொண்டு பொய்யாகவும் போலியாகவும் படித்துக் காண்பித்து, அதில் அவர்கள் அனைவரின் கையெழுத்தையும் பெற்றுள்ளனர். அதன் பிறகு துப்பாக்கி, கிராணைட் குண்டு மற்றும் பிற நவீன ஆயுதங்களைக் கொடுத்து பயிற்சி அளித்துள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, நீங்கள் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டீர்கள் என்று கூறி, அவர்களுக்கு போதை மருந்துகளும், ஸ்டீராய்டு போன்ற ஊக்க மருந்துகளும் கொடுத்து, துன்புறுத்தி போர் பயிற்சி வழங்கி அதன் பின் போரில் ஈடுபடுத்தியுள்ளனர்.
சிலர் போரில் இறந்துவிட்ட துயரமான நிலையில், இந்திய ஒன்றிய அரசின் தலையீட்டால் போர்முனையில் உள்ளவர்களில் சிலர் மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டது மனதிற்கு ஆறுதல் தந்தாலும், அவர்களிடமிருந்து நான் பெற்ற தகவல்கள் இன்னும் பேரதிர்ச்சியை வழங்குகின்றன.
என்னை இன்று சந்தித்த ஜக்தீப் சிங்கின் உடன் பிறந்த சகோதரர் மந்தீப் குமார் என்பவரை இத்தாலி நாட்டின் பணிக்கு அழைத்துச்செல்வதாக கூறி, அதற்கான கட்டணத்தையும் பெற்றுக்கொண்டு ரஷ்யாவிற்கு அழைத்துச்சென்று ஏமாற்றி, இதுபோல போர்பயிற்சி கொடுத்து, போர்முனைக்கு அனுப்பட்டுள்ளார். இன்னமும் அவர் ரஷ்யாவில் தான் உள்ளார். ஆனால், சில மாதங்களாக அவரிடமிருந்து எந்த தகவலும், தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை போரில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும், அப்படிக் கணக்கிட்டால் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரம் பேர் இவ்வாறு ரஷ்ய-உக்ரைன் போரில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இது சாதாரண பிரச்சினை அல்ல; விஸ்வரூபம் எடுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
ரஷ்யர்கள், சில இந்தியர்களின் ஒத்துழைப்போடு, நலிந்த குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, பெரிய சம்பளம் என்று மூளைச்சலவை செய்து, பொய் சொல்லி அழைத்துச் சென்று, கையெழுத்து பெற்று, போதை மற்றும் ஊக்க மருந்து கொடுத்து, போர்ப் பயிற்சி அளித்து, போருக்கு அனுப்பி வருகின்றனர். இது உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவும், தனிநபர்களாகிய நாமும் விழிப்புணர்வுடன் இருப்பதும் அவசியமாகிறது.
குறிப்பாக, இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களாக உள்ள உத்தரப் பிரதேசம், பீகார், பஞ்சாப், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பல நூறு நபர்கள் இப்படி ரஷ்யப் போர்முனையில் நிறுத்தப்பட்டு, பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
முன்னாள் இந்திய ராணுவ வீரரின் 21 வயதுடைய ஒரே மகன் இவ்வாறு தவறான வழிகாட்டுதலில் ரஷ்யாவில் சிக்கியுள்ளார். அவரது ஒரே சகோதரி எனக்கு ஒரு குரல் பதிவு அனுப்பி, “என் அண்ணனை எப்படியாவது உயிரோடு காப்பாற்றிக் கொடுங்கள். இந்த ரக்ஷாபந்தனுக்கு அவனுக்கு கையில் நான் சகோதரர் கயிறு கட்டக் காத்திருக்கிறேன்” என்றார். அவரது குரலை கேட்டவுடன் என் கண்கள் குளமாயின.
இப்படி ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பரிதவிப்பை எப்படி நாம் சரிசெய்யப் போகிறோம்? எளியவன் என் மீது நம்பிக்கை வைத்து இத்தனை பேர் என்னை அணுகுவது, இப்பிரச்சினையில் நான் கடைசிவரை முழுமையாக முயற்சி மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் உறுதியையும் எனக்கு வழங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவ கல்வி பயில ரஷ்யா செல்கின்றனர். அவர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வை தரவேண்டும். இனி ஒருவர் கூட கிஷோர் சரவணனனுக்கு ஏற்பட்ட பிரச்சனையைப்போல ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் நான் இதை வெளிச்சத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
அதே நேரம், இது தமிழ்நாட்டின் பிரச்சினை மட்டுமல்ல. இது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல. உலக நாடுகளின் பிரச்சினையாக மாறி வருகிறது. உலகத்தில் பின்தங்கிய நாடுகளான ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் மூளைச்சலவை செய்யப்பட்டு, ஆள் பிடித்து அழைத்துச் செல்லப்பட்டு, போருக்குள் தள்ளி, சாவுக்கு அனுப்பப்படுவதை நாம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
இதனை உலகப் பிரச்சனையாக இந்திய அரசு பெரிதுபடுத்த வேண்டும். தங்கள் ஆட்களின் பற்றாக்குறைக்காக ரஷ்யா மேற்கொண்டுவரும் இவ்வாறான நடைமுறையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காண்பிக்க வேண்டும். அது மட்டுமல்ல, இந்தியா, ரஷ்யாவை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, இது குறித்து கிடைத்த ஆதாரங்களோடு எனது முயற்சிகளை இன்னும் கூர்மையாகவும் விரைவாகவும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.
ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு இந்தியரையும் மீட்கவும், இனி வேறு யாரும் அப்படிச் சிக்காமல் தடுக்கவும் என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments