திருச்சிராப்பள்ளி , ஜனவரி 4, 2026
பஞ்சபூதத் தலங்களில் நீர்த்தலமாக விளங்கும் புகழ்பெற்ற திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில், மார்கழி மாத ஆருத்ரா மகோற்சவத்தை முன்னிட்டு இன்று காலை ஆருத்ரா தரிசன விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இன்று அதிகாலை முதலே சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, நடராஜ மூர்த்தி மற்றும் சிவகாமி அம்மை விசேஷ அலங்காரத்தில் நான்காம் பிரகாரத்தில் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வாக, இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே “திருவூடல்” (பிணக்கு) நடைபெறும் லீலை அரங்கேறியது.

பெருமானுக்கும் அம்மைக்கும் இடையே ஏற்பட்ட இந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு, சுந்தரமூர்த்தி நாயனார் இருவருக்கும் இடையே தூது சென்று சமாதானம் செய்யும் நிகழ்வு பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. சுந்தரரின் வேண்டுதலை ஏற்று, இறைவன்-இறைவி இடையேயான ஊடல் தணிந்து இருவரும் சமாதானம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சுவாமியும் அம்மனும் ஒன்றிணைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சேர்த்தி தீபாராதனை மிக விமரிசையாக நடைபெற்றது. “மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்” எனத் தொடங்கும் சேந்தனாரின் திருப்பல்லாண்டு பாடல்கள் முழங்க, திரளான பக்தர்கள் “தென்னாடுடைய சிவனே போற்றி” என முழக்கமிட்டு இறைவனைத் தரிசித்தனர்.
இந்த வைபவத்தில் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பிறவிப் பிணி அறுக்கும் ஆருத்ரா தரிசனத்தைக் கண்டு பரவசமடைந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments